திண்டிவனம் அருகேரெயிலில் அடிபட்டு பெண் சாவு
திண்டிவனம் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார்.
திண்டிவனம்,
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா(34). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் உறவினர் ஆவார்கள். சத்யா காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களுக்கு அரவிந்த் (14), ஜீவா (8) என்று 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, சத்யா திண்டிவனம் தீர்த்த குளத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
ரெயில் மோதியது
அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த தேஜஸ் ரெயில் சத்யா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சத்யா உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த செங்கல்பட்டு ரெயில்வே இருப்பு பாதை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இருப்புபாதை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.