கார் மோதி பெண் சாவு
நாமக்கல்லில் கார் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
கார் மோதியது
நாமக்கல் ராமாபுரம்புதூரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கலைவாணி (வயது 33). இவர்களுக்கு வன்சிகாஸ்ரீ (11), பிரனிதாஸ்ரீ (6) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் வன்சிகாஸ்ரீ நாமக்கல்-திருச்சி சாலை பொன்விழாநகரில் டியூசன் படித்து வருகிறார். இவரை அழைத்து வர நேற்று முன்தினம் இரவு கலைவாணி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார்.
இந்தநிலையில் நாமக்கல்-திருச்சி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக கலைவாணி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கலைவாணி படுகாயம் அடைந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கலைவாணியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சாவு
பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே கலைவாணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தாறுமாறாக ஓடிய அந்த கார் மேலும் சிலரது இருசக்கர வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.