மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது
குற்றாலம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணம் (வயது 73). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் வெளியூர்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் மூதாட்டி சொர்ணம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலையில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரது முகத்தை தலையணையால் அழுத்தி, அவர் அணிந்திருந்த 5½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரஸ்ஜித் என்பவரது மனைவி பிரசன்ன ரெஜி (35) என்பவர் மூதாட்டி சொர்ணத்திடம் நகை பறித்தது தெரியவந்தது. அதாவது பிரசன்ன ரெஜி, சொர்ணம் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவரது போனை வாங்கி பேசுவது வழக்கம். அவ்வாறு சம்பவத்தன்று போனை வாங்கியவர் மீண்டும் கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்று உள்ளார். இதனால் சொர்ணம் வீட்டுக் கதவை பூட்டாமல் தூங்கி விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரசன்ன ரெஜி, சொர்ணத்தின் வீட்டுக்குள் புகுந்து அவரது முகத்தை தலையணையால் அழுத்தி நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து பிரசன்ன ரெஜியை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.