ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 4½ பவுன் நகை திருடிய பெண் கைது


ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 4½ பவுன் நகை திருடிய பெண் கைது
x

கெங்குவார்பட்டி அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 4½ பவுன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

தேனி

கெங்குவார்பட்டியை அடுத்த காட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னன். இவர், வீட்டின் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா தேவி. கடந்த 3-ந்தேதி கவிதா தேவி நகைகளை கழற்றி வீட்டில் உள்ள மேஜையில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் அவர், நகைகளை அணிவதற்காக அதை எடுக்க சென்றார். அப்போது 4½ பவுன் தங்க கொலுசு மற்றும் மோதிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் நகை கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் வீடு மற்றும் ஓட்டலில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஓட்டலில் வேலை செய்த தேவதானப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி (38) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story