துணை வேந்தர்களை நியமிக்காமல் மாணவர்களின் கல்வியோடு தி.மு.க. அரசு விளையாடுகிறது - ஓ.பன்னீர்செல்வம்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
செல்வங்களுள் மிகச் சிறந்தது கல்விச் செல்வம் என்பார்கள். 'மனிதனாகப் பிறத்தல் அரிது. அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரியது' என்பதற்கேற்ப ஒவ்வொருவரும் கல்வி அறிவை பெறுவது அவசியம். கல்வி ஒன்றுதான் மக்களை நல்லவராகவும், வல்லவராகவும், புகழ் மிக்கவராகவும் வாழ வைக்கிறது. இப்படிப்பட்ட கல்வியை அளிக்கும் பல்கலைக்கழகங்கள் மாலுமி இல்லாத கப்பல் போல தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. எடுத்திருப்பதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளின் மொத்த உருவமாக தி.மு.க விளங்குகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கல்வியில் சிறந்து விளங்கும் உயரிய பல்கலைக்கழகங்கள் குறித்து மிகுந்த கவலைப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை 'இந்தியா' கூட்டணிக்கே தலைமையில்லை என்ற நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு எதற்கு தலைமை என்று தி.மு.க. அரசு நினைத்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மூலம் நடத்தப்படும் பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் இன்னமும் நடத்தப்படவில்லை என்றும், பலருக்கு அதற்கான பாடப் புத்தகங்கள்கூட விநியோகிக்கப்படவில்லை என்றும் மாணவ, மாணவியர் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு ஜூன் மாதமாவது தேர்வுகளை பல்கலைக்கழகம் நடத்துமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுபோல பல வேதனைகளை மாணவ, மாணவியர் அனுபவித்து வருகின்றனர்.
பதினேழு ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க., தன் தயவினால் இயங்கி வந்த மத்திய அரசிடம் வாதாடி, போராடி கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர ஒரு நடவடிக்கை எடுக்காமல், தற்போது மத்திய அரசின் நிறுவனமான பல்கலைக்கழக மானியக் குழுவுடன் முரண்படுவது ஏற்புடையதல்ல. இது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு சமம், மேலும், பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பல ஆண்டு காலம் இருந்து மறைந்த பேராசிரியர், முன்னாள் கல்வி அமைச்சர் க. அன்பழகன் அவர்களே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 1996-ம் ஆண்டு இது குறித்து பேசி இருக்கிறார். இதனைக் கருத்தில் கொள்ளாமல், மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக விதண்டாவாதம் செய்வது, மாணவ, மாணவியரின் எதிர்காலத்தோடு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.