நாமக்கல் நகராட்சி 23-வது வார்டுகொங்குநகர் காலனியில் பூங்கா அமைக்கப்படுமா?


நாமக்கல் நகராட்சி 23-வது வார்டுகொங்குநகர் காலனியில் பூங்கா அமைக்கப்படுமா?
x

நாமக்கல் நகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட கொங்குநகர் காலனியில் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்

23-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 23-வது வார்டில் பூசாரி தெரு, பத்ரகாளி தெரு, தென்பாண்டியன் வீதி, காசியார் தெரு, கே.வி.பி. வங்கி சந்து, தீயணைப்புத்துறை அலுவலக தெரு, செல்வகணபதி நகர், அண்ணாநகர் காலனி, கொங்குநகர் காலனி, கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் 3 ரேஷன்கடைகளும், 3 அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும் இந்த வார்டில் தான் உள்ளது.

இந்த வார்டு ஏற்கனவே உள்ள நகராட்சி பகுதியுடன், பெரியப்பட்டி ஊராட்சியில் இருந்து ஒரு பகுதியை இணைத்து உருவாக்கப்பட்டது ஆகும். இதனால் இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே அங்கு கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த வார்டில் 1,520 ஆண்கள், 1,621 பெண்கள், ஒரு இதரர் என மொத்தம் 3,142 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வகுமார் வெற்றிபெற்றார். நகராட்சியின் பிற வார்டுகளை போல இந்த வார்டிலும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும், கொங்குநகர் காலனியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாதாள சாக்கடை திட்டம்

கொங்குநகர் காலனியை சேர்ந்த சரோஜினி கூறியதாவது:-

எங்களது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் காலனி, கொங்குநகர் காலனி உள்ளிட்ட பகுதிகள் பெரியப்பட்டி ஊராட்சியில் இருந்து நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியாகும். எனவே இதுவரை பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இதேபோல் வார்டு முழுவதும் தெருவிளக்கு வசதி இல்லாத பகுதிகளில் தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும். கொங்குநகர் காலனியில் சிறுவர், சிறுமிகள் பொழுதுபோக்கும் வகையில் பூங்கா அமைத்து தர வேண்டும். தற்போது ஒரு விற்பனையாளர் 2 ரேஷன்கடைகளை கவனித்து வருகிறார். இதனால் கூடுதலாக ஒரு விற்பனையாளரை நியமனம் செய்து, தினசரி ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்துக்கு இடையூறு

சந்தைபேட்டைபுதூரை சேர்ந்த தனசேகரன்:-

எங்களது வார்டுக்கு உட்பட்ட பரமத்தி சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையின் நடுவே சிமெண்டு கற்களால் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலையின் மறுபுறத்தில் உள்ள ஓட்டல்களுக்கு செல்லவும், பள்ளி குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிவிடவும் சுமார் 1 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே தேவையான இடங்களில் இடைவெளி ஏற்படுத்த வேண்டும்.

வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மற்றும் ரேஷன்கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். கொங்குநகர் காலனி பிரதான சாலையில் மின்கம்பம் ஒன்று பழுதான நிலையில் காணப்படுகிறது. அதை மாற்றி அமைக்க வேண்டும். இதேபோல் அண்ணாநகர் காலனியில் வீதியின் நடுவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களையும் மாற்றி அமைக்க வேண்டும். சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்?

இது குறித்து 23-வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார் கூறியதாவது:-

நான் தினமும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறேன். நான் பொறுப்பேற்ற பிறகு கொங்குநகர் காலனியில் மட்டும் 6 மண்சாலைகளை தார்சாலையாக மாற்றி உள்ளேன். செல்வகணபதி நகரில் ஒரு வீதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. அண்ணாநகர் காலனியில் நீண்ட நாட்களாக குடியிருப்பு பகுதியில் குப்பை மலைபோல் தேங்கி இருந்தது. அதை அகற்றி, அப்பகுதியில் பேவர் பிளாக் கற்கள் மூலம் பாதை ஏற்படுத்தி கொடுத்து உள்ளேன்.

இதேபோல் கே.வி.பி. வங்கி சந்து, அம்மன் மளிகை சந்து ஆகியவற்றில் மண்சாலை தார்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. தென்பாண்டியன் வீதியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பழுதான சிமெண்டு சாலை மற்றும் தார்சாலைகளை சீரமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

பாதாள சாக்கடையை பொறுத்த வரையில் விரைவில், புதிதாக இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அப்போது கழிவுநீர் பிரச்சினைக்கு முடிவு வரும். கொங்குநகர் காலனியில் பூங்காவும், அண்ணாநகர் காலனியில் சமுதாயக்கூடம் அமைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வழிகாட்டுதல்படி எனது வார்டில், பதவிக்காலம் முடிவடையும் முன்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

1. அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை வசதி.

2. கொங்குநகர் காலனியில் பொழுதுபோக்கு பூங்கா.

3. அண்ணாநகர் காலனியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்.

4. பழுதான சிமெண்டு சாலைகளை சீரமைக்க வேண்டும்.

5. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

6. ரேஷன் கடைகளில் தினசரி பொருட்கள் வழங்க வேண்டும்.


Next Story