முத்தனூரில் இடிக்கப்பட்ட பழமையான தரைப்பாலம் மீண்டும் கட்டப்படுமா?


முத்தனூரில் இடிக்கப்பட்ட  பழமையான தரைப்பாலம் மீண்டும் கட்டப்படுமா?
x

முத்தனூரில் இடிக்கப்பட்ட பழமையான தரைப்பாலம் மீண்டும் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கரூர்

தரைப்பாலம்

கரூர் மாவட்டம் கோம்புப்பாளையம் ஊராட்சி முத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த 70 வருடங்களுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலத்தின் வழியாக முத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும், அதே போல் தங்கள் வீடுகளில் உள்ள கால்நடைகளை வாய்க்கால் மேட்டில் மேய்ப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். முக்கிய கோவில் விசேஷங்களுக்கு இந்த காவிரி ஆற்றுக்கு வந்து தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.

அதேபோல் காவிரி கரையோரம் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் தங்களின் நிலங்களில் உள்ள பயிர்களுக்கு இடுப்பொருட்களை கொண்டும் சென்றும், அதேபோல் விளைநிலங்களில் விளைந்த விளைபொருட்களை இந்த பாலத்தின் வழியாக கொண்டு வந்தனர். இதனால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்த தரைப்பாலம் பயனுள்ளதாக இருந்து வந்தது.

விரிசல்

இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு 70 ஆண்டுகள் ஆனதன் காரணமாக தரைப் பாலத்தின் அடியில் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த சிமெண்டு கட்டைகள் பழுதடைந்து கட்டப்பட்டிருந்த கருங்கற்கள் கீழே விழுந்து வந்தது. இதன் காரணமாக தரைப்பாலம் விரிசல் ஏற்பட்டு எந்த நேரமும் புகழூர் வாய்க்கால் தண்ணீருக்குள் விழும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அந்த தரைப்பாலத்தை பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுத்தி வந்தனர். இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்கள் சிரமம்

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த தரைப்பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து விட்டு பாலம் அகற்றப்பட்ட இடத்தை அடைத்து தடுப்பு ஏற்படுத்தினார்கள். ஆனால் புதிய பாலம் கட்டப்படவில்லை. இதன் காரணமாக முத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள், விவசாயிகள் காவிரி ஆற்றுக்கும், விளை நிலங்களுக்கும் செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடந்த இரண்டு வருடங்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புதிய பாலம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, உள்ளாட்சித் துறை அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுத்து புதிய பாலம் கட்டி தராததால் பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து காவிரி ஆற்றுக்கு இந்த வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

எதிர்பார்ப்பு

ஆடு, மாடுகளையும் மேய்ச்சலுக்கு இந்த வழியாக ஓட்டிச் செல்ல முடியாததால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முத்தனூர் பகுதியில் இடிக்கப்பட்ட பாலம் இருந்த இடத்தில் மீண்டும் புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து புதிய பாலம் கட்டி தருவார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தரைப்பாலம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

சிரமப்பட்டு வருகிறோம்

முத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி:- வாய்க்காலின் குறுக்கே கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்து அந்தப் பாலத்தை இடித்து போட்டு விட்டனர். இதனால் இந்த வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக புதிய பாலம் கட்டி தரக்கோரி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் நாங்கள் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விரைந்து புதிய பாலம் கட்டித் தர வேண்டும்.

முத்தனூர் பகுதியை சேர்ந்த விவசாயி மணி:-எனது தோட்டம் காவிரி கரையோரம் உள்ளது. பாலம் இருந்தவரை பாலத்தின் வழியாக பல்வேறு இடுபொருட்களையும், விளை பொருட்களையும் கொண்டு சென்று வந்தேன். பாலம் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் புதிய பாலம் கட்டி தராததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.பொதுமக்களும், விவசாயிகளும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டித் தர வேண்டும்.

புதிய பாலம் வேண்டும்

செட்டிதோட்டம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி:- புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள், கூலித் தொழிலாளிகள், விவசாயிகள் சென்று வந்தனர். முழுமையாக பழுதடைந்ததன் காரணமாக எங்களின் கோரிக்கையை ஏற்று பழுதடைந்த பாலத்தை இடித்து அகற்றி தடுப்பு ஏற்படுத்தி விட்டார்கள். ஆனால் இதுவரை புதிய பாலம் கட்டித் தரவில்லை. இதனால் நாங்கள் வாய்க்காலின் குறுக்கே செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய பாலம் கட்ட வேண்டும்.

கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன்:- முத்தனூரில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருந்தது. பாலம் பழுதடைந்து இடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை பல்வேறு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரிடமும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரும் கண்டு கொள்ளவில்லை.அதனால் தொடர்ந்து முத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கூலித்தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகிறோம்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய பாலம் கட்டித் தர வேண்டும்.

யாரும் செல்ல முடியவில்லை

முத்தனூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன்:-எங்களது விவசாயத் தோட்டத்திற்கு இந்த வழியாக இடுபொருட்களை எடுத்துச் சென்றோம். விளைபொருட்களையும் இந்த வழியாக கொண்டு வந்தோம். தொடர்ந்து பயன்படுத்தி பயனடைந்து வந்தோம். அதேபோல் எங்களது ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு இந்த பாலத்தின் வழியாக அழைத்து சென்று மீண்டும் மாலை நேரத்தில் வீடுகளுக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டித் தராததால் இந்த வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய பாலம் கட்டித் தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story