நலிவடைந்து வரும் பட்டுப்புடவை உற்பத்திக்கு புத்துயிர் கிடைக்குமா?


நலிவடைந்து வரும் பட்டுப்புடவை உற்பத்திக்கு புத்துயிர் கிடைக்குமா?
x

நலிவடைந்து வரும் பட்டுப்புடவை உற்பத்திக்கு புத்துயிர் கிடைக்குமா?

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

மூலப்பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பட்டுப்புடவை உற்பத்தி தொழில், நலிவடைந்து வருகிறது. இதனால் மாற்றுத்தொழிலுக்கு சென்று வரும் நெசவாளர்கள், இந்த தொழிலுக்கு புத்துயிர் கிடைக்குமா? என எதிர்பார்த்து உள்ளனர்.

திருபுவனம் பட்டுப்புடவை

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில் திருபுவனம் உள்ளது. இங்கு பட்டு நூல்காரர்கள் என்றழைக்கப்படும் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகம். இந்த ஊரில் ஏறத்தாழ 5 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.

இவற்றில் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டுப்புடவை உற்பத்தி தான் குடும்ப தொழில்.

இங்கு நெய்யப்படும் பட்டுப்புடவைகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். இன்றைக்கும் பட்டுப்புடவை உற்பத்தியில் தமிழகத்திலேயே இவர்கள் தலைசிறந்து விளங்குகின்றனர். திருபுவனத்தில் இருக்கும் சன்னதி தெரு தான் அங்கு உற்பத்தியாகும் அனைத்து பட்டுப்புடவைகளின் காட்சிக்கூடம். இங்கு அரசு கூட்டுறவு சங்கங்களும், சிறிய, பெரிய தனியார் கடைகளும் உள்ளன.

அழகான வடிவமைப்பு

அரசே பல கூட்டுறவு சங்கங்களை அமைத்து பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்து சங்கத்தின் மூலமே விற்பனை செய்து வருகிறது.

திருபுவனத்தில் நெய்யப்படும் பட்டுப்புடவை, காஞ்சிபுரம் பட்டை போன்று பிரபலமானது.

பட்டு சேலைகளின் தலைப்பு, ஓரங்களில் அழகான வடிவமைப்பு, ஜரிகை வேலைப்பாடுகள் அனைவரையும் கவரும் விதத்தில் இருப்பதால் திருபுவனம் பட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது.

பல வண்ணங்களில் பல வடிவமைப்புகளில் பட்டுப்புடவைகள் இங்கு கிடைக்கிறது. திருமணத்திற்கு தேவையான பட்டுப்புடவைகளை 'ஆர்டர்' செய்தால் 2 மாதங்களில் தயாரித்து வழங்குகின்றனர். திருபுவனம் பட்டுப்புடவைகள் நைசாக இருப்பதால் பெண்கள் விரும்பி அணிகின்றனர்.

சிறப்பு அம்சம்

இந்த நவீன யுகத்திலும் திருபுவனத்தில் பட்டுப்புடவைகள் கைகளால் நெய்வதே இதன் புகழ் நிலைத்து இருப்பதற்கு காரணம். ஒரு பட்டுப்புடவை உற்பத்தி செய்ய குறைந்தது 15 நாட்கள் வரை ஆகிறது. மாதத்துக்கு ஒரு குடும்பம் 2 சேலைகள் வரை தயார் செய்கிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் புடவைகளின் நிறம், ஜரிகை போன்றவற்றில் எப்போதுமே தனித்தன்மை இருக்கும். குஜராத்தில் இருந்து வரவழைக்கப்படும் நூறு சதவீதம் தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகையும், பட்டு நூலும் இணைந்து பல்வேறு வடிவங்களில் நெய்திருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

கண்களுக்கு விருந்து

நோ்த்தியான பாவு, உயா்தர பட்டு நூலைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த புடவையில் சப்புரி பட்டு நூல் கெட்டிச் சாயங்களை கொண்டு நிறமேற்றப்படுகிறது. மேலும், சுத்தமான தங்கம், வெள்ளி உலோகங்கள் மட்டுமே உடலுக்கு நலம் பயக்கும் என்பதால் அசல் வெள்ளி ஜரிகைக்கு சுத்தமான தங்க முலாம் பூசிய ஜரிகை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளில் வனசிங்காரம் குறிப்பிடத்தக்கது. இது முழுவதும் ஜரிகை இழைகளால் சிறந்த வேலைப்பாடுகளுடன் நெய்யப்படும் பட்டுப்புடவை. இந்தப் பட்டுப்புடவை திருபுவனம் நெசவாளா்களின் கைத்திறனுக்குச் சான்றாகவும் விளங்குகிறது. இதில் மான், மயில், புலி, சிங்கம் ஆகிய உருவங்கள் மிகவும் தத்ரூபமாக இடம்பிடித்து கண்களுக்கு விருந்தளிக்கும்.

நலிவடைந்து வருகிறது

பளபளக்கும் பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்து வரும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பளபளக்கவில்லை. மாறாக இருட்டடித்துப்போய் உள்ளது. கோரா பாவு, சப்புரி, ஜரிகை போன்ற பட்டுப்புடவை உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் முன்புபோல் அதிக அளவு பட்டுப்புடவைகள் நெய்யக்கூடிய பணி நெசவாளர்களுக்கு கிடைப்பதில்லை.

இதனால் நெசவுதொழில் நலிவடைந்து வருகிறது. தங்களது தொழில் நலிவடைந்து வருவதால் நெசவாளர்கள் பலர் வேறு தொழில்களை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர். இதனால் நெசவுதொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்தி தங்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பது நெசவாளர்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story