ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?
நாகூர் வடக்கு பால்பண்ணைச்சேரியில் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாகூர்:
நாகூர் வடக்கு பால்பண்ணைச்சேரியில் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். நாகூர் மெயின்ரோடு வழியாக காரைக்கால், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, சென்னை, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
நாகை-நாகூர் சாலையில் வடக்கு பால்பண்ணைச்சேரி அருகில் ஒரு மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
அகற்ற வேண்டும்
வேகமாக காற்று வீசினால் கூட இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.