சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
ூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பயணிகள் நிழலகம்
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் இருந்து மாவூர் செல்லும் சாலையில் இடையில் உள்ளது ஊட்டியாணி கிராமம். இந்த கிராமத்தையொட்டிய சாலையோரத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.
இந்த பயணிகள் நிழலகத்தை ஊட்டியாணி, ஆத்தூர், திருநாட்டியத்தான்குடி, இளமங்கலம், நத்தம், வடபாதிமங்கலம், மாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சேதமடைந்துள்ளது
இங்கு பொதுமக்கள் காத்திருந்து கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மாவூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி போன்ற ஊர்களுக்குச் பஸ்சில் சென்று வருகின்றனர். மழை மற்றும் வெயில் நேரங்களில் முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு இந்த பயணிகள் நிழலகம் பெரிதும் பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமலும், இருக்கைகள் இடிந்து விழுந்தும் சேதம் அடைந்துள்ளது. தற்போது அங்கு இருக்கைகளே இல்லாமல் உள்ளது.
சீரமைக்க வேண்டும்
பயணிகள் நிழலகத்தில் குப்பைகள் மற்றும் உடைந்த மதுபாட்டில்கள் சிதறி கிடக்கிறது. இதனால் அந்த பயணிகள் நிழலகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தமாக உள்ளது. பயணிகள் நிழலகத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாமல் மழை, வெயிலில் நின்று பஸ்களில் ஏறி செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இருக்கைகள் இடிந்து விழுந்தது
இதுகுறித்து வடபாதிமங்கலம் பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் கூறுகையில், ஊட்டியாணியில் பயணிகள் நிழலகம் உள்ள இடம் மிகவும் போக்குவரத்து மிகுந்த இடமாகும். இங்கிருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, மாவூர், வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் போன்ற ஊர்களுக்கு பஸ்களில் சென்று வந்தனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த பயணிகள் நிழலகம் சேதமடைந்து இருக்கைகள் இடிந்து விழுந்துள்ளது. அதனால் இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மழை, வெயிலில் நின்று பஸ்சில் ஏறி செல்கின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.
மதுகுடிக்கும் இடமாக மாறி வருகிறது
கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில், இந்த பயணிகள் நிழலகம் எந்தவித பராமரிப்பின்றி உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக சமூக விரோதிகள் இந்த கட்டிடத்தை மது குடிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர்.
அவர்கள் மது குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து அங்ேகயே போட்டு விட்டு செல்கின்றனர். இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் கால்களில் உடைந்த பாட்டில்கள் குத்தி காயம் ஏற்படுகிறது. இந்த சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.