மீண்டும் புத்துயிர் பெறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்


மீண்டும் புத்துயிர் பெறும்  பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் புத்துயிர் பெறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

1972-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மறுவாழ்வு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார்.

இதன் மூலம் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு அவர்கள் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கிக் கொடுத்தது.

ஓடி ஒளிந்தார்கள்

* ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் என்று மக்கள் கூடுகிற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை, வாகனங்களில் வந்து பிடித்துப் போவார்கள்.

அரசு வாகனங்கள் வருவதைக் கண்டாலே போதும் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று பிச்சைக்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

* அவ்வாறு பிடித்துப் போனவர்களில் நோயாளிகளாக இருந்தால் அரசு மருத்துவ மனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.

* மன நோயாளிகளாக இருந்தால் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுவர்.

* மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.

* நிர்பந்தங்களால் பிச்சை எடுக்க வந்தவர்களாய் இருந்தால் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப் படுவார்கள்.

* இதற்காக தமிழ்நாட்டில் 6 இடங்களில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் கட்டித் தரப்பட்டன.

இது ஒரு உன்னதமான சமூகநலத் திட்டம். இதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தி இருந்தால் பிச்சைக் காரர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

காசு பார்க்கும் கயவர்கள்

'பிச்சை எடுத்து உண்ணுவது அவமானம். உழைத்து உண்பதே தன்மானம்' என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்தது.

நாளடைவில் அது முடங்கிப் போனதால் பஸ், ரெயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், வழிப்பாட்டு தலங்கள் போன்ற இடங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறிப்போயின.

குழந்தைகளின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக ஆதரவற்ற முதியோர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகுகின்றனர்.

அதே நேரம், உழைக்காமல் கையை நீட்டினாலே பணம் கிடைப்பதால் பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செய்யவும் துணிகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால்? குழந்தைகள், பெண்களை கட்டாயப்படுத்தி இந்தத் தொழிலில் தள்ளி காசு பார்க்கும் கயவர் கூட்டமும் நிழல் மறைவாய் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' திரைப்படம், இந்த அக்கிரமத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத், இந்தூர், லக்னோ, நாக்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப் படுகிறது.

போலீஸ் நடவடிக்கை

தற்போது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த சிலரும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் 'சிக்னல்' பகுதிகளில் அவர்களைக் குழந்தை குட்டிகளுடன் காணமுடிகிறது.

இந்த நிலையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக போலீஸ்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 3-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் அரசு காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

பெண்கள், குழந்தைகளை பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

இதில் கண்துடைப்பு இல்லாமல் உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிச்சை எடுப்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் மறுவாழ்வும் பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிப்பதற்காக எடுத்துவரும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து கீழே காண்போம்.

உழைத்து உண்ண வேண்டும்

சூளையை சேர்ந்த சிவா:-

முன்பெல்லாம் பிச்சைக்காரர்களிடம் 1 ரூபாய் கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிச் செல்வார்கள். ஆனால் தற்போது 1 ரூபாய் கொடுத்தால் நம்மை ஏளனமாக பார்க்கிறார்கள். கையேந்தும் முதியோர்களை பார்த்தால் தர்மம் செய்ய மனம் தானாகவே இறங்கி வருகிறது. ஆனால் கை, கால்கள் நல்ல நிலையில் உள்ளவர்கள், உழைக்காமல் உடலை வளர்க்க நினைப்பவர்கள் பிச்சைக்கு கையேந்தும் போது கோபம்தான் வருகிறது.

இவர்கள் மீது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா? என்று ஆதங்கம் வரும். தற்போது தமிழக போலீஸ்துறை தொடங்கி உள்ள 'ஆபரேஷன் மறுவாழ்வு' நடவடிக்கை ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது.

சுதந்திரப் பறவையாக...

பிராட்வே பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து வரும் மாற்றுத்திறனாளி ஆறுமுகம்:-

எனது சொந்த ஊர் சேலம். பிழைப்பு தேடி சென்னை வந்தேன். இங்கு விபத்தில் சிக்கி கை-காலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் உழைப்பதற்கு எனது உடம்பு ஒத்துழைக்கவில்லை. எனவே வயிற்று பசியை போக்குவதற்காக பிச்சை தொழிலில் இறங்கினேன்.

சிலர் எனது நிலையைப் பார்த்து தானாகவே வந்து பணம் கொடுப்பார்கள். சிலர் கேட்டாலும் காது கேட்காதது போன்று செல்வார்கள். எனினும் அன்றாடம் உணவுத் தேவைக்கு பணம் கிடைத்துவிடுகிறது. தற்போது என்னைப் போன்ற பிச்சைக்காரர்கள் சுதந்திரப் பறவையாக இருக்கிறோம்.

எங்களை கூண்டுக்குள் அடைப்பது போன்று மறுவாழ்வு மையங்களில் அடைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசின் கடமை

விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அகிலன்:-

தெருவோரங்களில் இருக்கும் கைவிடப்பட்டவர்களை தமிழக அரசு, கூடுதல் கவனம் செலுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும். பெரும்பாலும் மிகவும் வயது முதிர்ந்தவர்கள், புத்திசுவாதீனம் இல்லாதவர்கள்தான் அதிகம். தமிழக அரசு, இவர்களுக்கான மறுவாழ்வு அளிக்க சீரிய முறையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக மறுவாழ்வு குழு ஒன்றை ஆரம்பித்து ஒருமாத காலம் அவகாசம் எடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பிச்சை எடுப்பவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதோடு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் செய்ய வேண்டும். கொரோனா காலக்கட்டத்தில் இவர்களின் நிலை கொடுமையானதாக இருந்தது. எங்கள் கரிகால சோழன் பசுமை மீட்புப்படை சார்பில், கொரோனா காலத்தில் இவர்களை தேடித்தேடி உணவு வழங்கினோம். நிரந்தர இருப்பிடம், உணவு கிடைக்காத இவர்களின் நிலைமை கொடுமையானது. தமிழகத்தில் பிச்சை எடுக்கும் நபர்கள், கைவிடப்பட்டவர்கள் இல்லாத நிலை ஏற்பட வேண்டும்.‌ இது அரசின் கடமையும்கூட. அரசு, இதில் சீரிய முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

வாழ்வாதாரம் முன்னேறவில்லை

திண்டிவனம் ராஜேஷ்:-

பிச்சை எடுப்பவர்கள் பலவிதமாகவும், பலவித முறைகளையும் கையாளுகிறார்கள். அரசு, பிச்சைக்காரர்கள் நலவாழ்வு மையம் ஏற்படுத்தியுள்ளது. அங்கு பிச்சை எடுப்பவர்களை தங்க வைத்தால் யாரும் தங்குவதில்லை. கூண்டில் அடைத்த பறவைகள்போல் இல்லாமல் சுதந்திரமாக பிச்சை எடுத்து வாழ்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். இதேபோல் பூம் பூம் மாட்டுக்காரர்கள், குடுகுடுப்பை இனத்தவர்கள் குறிப்பிட்ட காலங்களில் பிச்சை எடுத்து வருவார்கள். அதேபோல் பிச்சை எடுத்தபோது குழந்தைகளை திண்டிவனத்தில் உள்ள சைல்டுலைன் அலுவலர்கள் அழைத்து வந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது இருந்த போலீஸ் அதிகாரியிடம் நான் சென்று, அவர்கள் தொடர்ந்து பிச்சை எடுப்பதில்லை, குறிப்பிட்ட காலங்களில் பிச்சை எடுப்பது வழக்கம், இது அவர்களின் பாரம்பரிய பழக்கம் என அவருக்கு விளக்கம் அளித்தேன். அதன்பேரில் அந்த போலீஸ் அதிகாரி, அக்குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கி கொடுத்து நன்றாக படிக்க வேண்டுமென அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள அவர்களுக்கு அடிப்படை வசதியான சாதி சான்றிதழ் வழங்கினாலே அவர்களுடைய வாழ்வாதாரம் உயரும். ஆனால் அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம்தான் அவர்களுடைய வாழ்வாதாரம் இதுவரையிலும் முன்னேறாமல் தடைபட்டுள்ளது.

அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை

செஞ்சியை சேர்ந்த சுந்தரவடிவேல்:-

முதலில் கை ரிக்க்ஷா ஓட்டுபவர்களை தமிழக அரசு முழுவதுமாக தடை செய்தது. அடுத்தகட்டமாக கோவில்களில் வெளியே பிச்சை எடுப்பவர்களை அன்னதான திட்டம் அறிவித்து அவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கினார்கள். பின்பு அவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தையும் அறிவித்தார்கள். ஆனால் அந்த மறுவாழ்வு திட்டமானது சென்னை பகுதியில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலோ, நகரங்களிலோ பிச்சை எடுப்பவர்களை எந்தவொரு அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சென்னை பகுதியில் பிச்சை எடுப்பவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் வெளிமாவட்டங்கள், நகரப்பகுதிகளுக்கு குழந்தைகளை கடத்திச்சென்று பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிறிய நகரங்களில் எந்தவொரு அதிகாரிகளும் அதை கண்டுகொள்வதில்லை.

அரசுக்கு ஆதரவு

விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரம நிர்வாகி மரியஜூபின்:-

தமிழ்நாட்டில் அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் கைகொடுத்து ஆதரவாக இருந்து வருகிறோம். அதுதான் எங்கள் நோக்கம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், வளத்தி, மயிலம், திருக்கோவிலூர், கஞ்சனூர் ஆகிய போலீஸ் நிலையங்களிலிருந்து சுமார் 55-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை எங்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி ஆகியவற்றை நாங்கள் செய்து வருகிறோம். அவர்களின் நிலையை அறிந்து தேவையான உதவிகளை செய்து வருகிறோம். இதுவரை 3 பேரை அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். உடல்நலம் குன்றியவர்களை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் புதுச்சேரி மாநிலம் அரியூரில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்து உரிய சிகிச்சையும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. எங்களுடைய ஆசிரமத்தில் ஏற்கனவே 200 பேர் ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். அவர்களது தேவைகள் அனைத்தையும் செய்து வருகின்றோம். மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆதரவற்ற நிலையில் இறந்த 300-க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை இறுதி சடங்குகள் செய்துள்ளோம். போலீசார் செய்துவரும் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் என்றும் கைகொடுத்து ஆதரவோடு உறுதுணையாக இருப்போம்.

மறுவாழ்வு அளிக்க...

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் கடைவீதிகள் உள்ளிட்ட இடங்களில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்து வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு மீட்கப்படும் நபர்களை முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து அவர்களுக்கு புதிய ஆடைகள் வாங்கிக்கொடுப்பதோடு உணவளித்து ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இப்பணியில் இதுவரை 30 பேரை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து மறுவாழ்வு அளித்துள்ளோம். ஆனால் நமது மாவட்டத்தில் அரசு சார்பில் ஆதரவற்றோர் இல்லம் ஏதும் இல்லாததால் தனியார் அறக்கட்டளை சார்பில் இயங்கி வருகின்ற ஒன்றிரண்டு முகாம்களிலேயே சேர்க்கும் நிலை உள்ளது. அம்முகாம்களிலும் இதுபோன்றவர்களை சேர்ப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. குறிப்பாக நிதி பற்றாக்குறை, இடவசதி போன்ற காரணங்கள் உள்ளது. அதுமட்டுமின்றி நாங்கள் மீட்டு கொண்டு சேர்க்கும் நபர்களில் உடல்நிலை சரியில்லாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி சேர்க்க மறுக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பிச்சை எடுப்பவர்களை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு சார்பில், நமது மாவட்டத்தில் ஆதரவற்றோர் மறுவாழ்வு மையம் அமைத்தால் பிச்சை எடுப்பவர்களை மீட்டு அம்மையங்களில் சேர்க்கும் பணியை இன்னும் துரிதப்படுத்தலாம். இதன் மூலம் பலருக்கும் மறுவாழ்வு அளிக்க ஏதுவாக இருக்கும் என்றார்.

அதிகாரிகள் முன்வரவில்லை

கள்ளக்குறிச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வன்:- கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் உண்ண உணவு, உறங்க இடமில்லாமல் சாலை ஓரங்களில் சுற்றி வருகின்றனர். ஆனால் எந்த அதிகாரியும் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிவருபவர்களை முறையாக அழைத்துச் சென்று மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்க முன் வராமல் உள்ளனர். ஆனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்த 2 பேரை மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வருபவர்களை அதிகாரிகள் முறையாக அழைத்துச் சென்று மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயராஜ்:-

தற்போதைய சூழலில் நாளுக்கு நாள் ஆதரவற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கான காரணம் பிச்சை என்கின்ற வார்த்தை. அந்த வார்த்தையை முற்றிலும் ஒழித்தால் ஆதரவற்றவர்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள்.

ஒருவர் பிச்சை கேட்கிறார் என்றால், அவர்களுக்கு பிச்சை அளித்து ஊக்குவிக்காமல் நீங்கள் எந்த காரணத்திற்காக இந்த நிலைக்கு வந்தீர்கள் என்ற காரணத்தை அவர்களிடம் கேட்டு அவர்களைப் பற்றி அறிந்து உடனடியாக அருகில் உள்ள முதியோர் இல்லங்கள், அல்லது 14567 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால், அவர்களுக்கு தேவையான உதவிகள் நிச்சயம் கிடைக்கும்.

கடலூர் மாவட்டத்தில் ரத்த உறவுகள் என்கிற அமைப்பில் முடிந்தவரையில் இதுபோன்றவர்களை மீட்கும் முயற்ச்சியை முன்னெடுத்து வருகிறோம். இருப்பினும் இதுபோன்ற நிலையில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிட உறிய மையங்களை அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்க நடவடிக்கை மேற் கொண்டால் சிறந்ததாக இருக்கும்.

அந்த வகையில் அரசின் உன்னத திட்டமான, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தையும் அரசு தீவிரமாக முன்னெடுத்தால் நிச்சயம் இங்கு ஆதரவற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவிடும் என்றார் அவர்.

ஆபரேஷன் மறுவாழ்வு நடவடிக்கை மூலம் மீட்கப்படும் வயதான பிச்சைக்காரர்களுக்கு மட்டும்தான் அடைக்கலம். உடல்நிலை நன்றாக உள்ள பிச்சைக்காரர்கள் மனதில் உழைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.


Next Story