புதிய மின்கம்பங்கள் அமைத்து தரப்படுமா?
புதிய மின்கம்பங்கள் அமைத்து தரப்படுமா?
திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மின் கம்பங்கள்
திருச்சிற்றம்பலம் அருகே கல்லூரணிக்காடு ஊராட்சி உள்ளது. இங்குள்ள யாதவர் தெரு மயான சாலைக்கு செல்லும் சாலையில் பல வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட மின்மாற்றி செயல்பட்டு வருகிறது. இந்த மின்மாற்றி மூலம் கல்லூரணிக்காடு மற்றும் பிற பகுதிகளுக்கு மின்வினியோகம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள 2 மின்கம்பங்களிலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்த நேரத்திலும் மின்மாற்றி கீழே விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக அந்த வழியாக செல்பவர்கள் உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள பிற மின்கம்பங்களும் சாய்ந்த நிலையில் உள்ளது.
புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்
எனவே இனியும் தாமதிக்காமல் ஒட்டங்காடு துணை மின் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்தை உடனடியாக பார்வையிட்டு, மின்மாற்றியை தாங்கி நிற்கும் சேதம் அடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக மின் கம்பங்களை அமைத்து மின்மாற்றியை பொருத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரணிக்காடு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.