மாஞ்சோலையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?-தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு


மாஞ்சோலையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?-தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
x

மாஞ்சோலையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருநெல்வேலி

காலையில் எழுந்தவுடன் அனைவரும் விரும்பி பருகும் தேசிய பானமாக தேநீர் திகழ்கிறது. ஆனாலும் அதனை உற்பத்தி செய்யும் தேயிலைதொழிலாளர்களின் வாழ்வாதாரம் பரிதாபமாக உள்ளது.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி, கோதையாறு போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் அமைந்துள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையை கடந்து மலையின் மீது சுமார் 3,350 அடி உயரத்தில் மாஞ்சோலை அமைந்துள்ளது.

தொடர்ந்து மலையின் மீது காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, கோதையாறு போன்ற பகுதிகள் சுமார் 4,920 அடி உயரத்தில் உள்ளன. ஏழைகளின் ஊட்டி, பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும், மனதை கொள்ளை கொள்ளும் பேரழகுடன் திகழும் இந்த மலைப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களே பல தலைமுறைகளாக அங்கு வசிக்கின்றனர்.

உறைய வைக்கும் குளிர்

மணிமுத்தாறு மலையடிவாரத்தில் உள்ள அணையில் இருந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளதால் மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி, கோதையாறு போன்ற பகுதிகளுக்கு வனத்துறையிடம் முன் அனுமதி பெற்றே பொதுமக்கள் செல்ல முடியும்.

இங்கு பல தலைமுறைகளாக தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் பணிபுரிந்தாலும், தங்களுக்கு என்று நிரந்தர இடம் கிடையாது என்கிறார்கள். வேலை செய்யும் காலம் மட்டும் அங்குள்ள தற்காலிக குடியிருப்புகளில் இலவசமாக தங்கி கொள்ளலாம், என்ற வசதி உள்ளது.

மலையின் மீது ஆண்டின் பெரும் பகுதியை உறைய வைக்கும் குளிரிலும், ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகளுக்கு இடையிலும், வனவிலங்குகளின் மத்தியிலும் சொற்ப வருமானத்துக்காக உயிரை பணயம் வைத்து பணியாற்றும் தொழிலாளர்கள், போதிய அடிப்படை வசதிகளின்றி நிரந்தர வாழ்வாதாரமின்றி பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கை ஓட்டத்தை தொடர்கின்றனர், என்பது வேதனை.

இதுகுறித்து தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்.

வாழ்வாதாரம்

நாலுமுக்கு தேயிலை தோட்ட தொழிலாளியும், முன்னாள் வார்டு கவுன்சிலருமான போஸ்:-

மேற்கு தொடர்ச்சி மலையில் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்த ஒரு நிறுவனம் இங்கு தேயிலை பயிரிட்டுள்ளது. 1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டத்தின்படி அந்த நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்டது. வருகிற 2028-ம் ஆண்டு குத்தகை காலம் முடிந்த பின்னர் தேயிலை எஸ்டேட்டுகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் பல தலைமுறைகளாக இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அபாயம் உள்ளது. எனவே கேரளா, கர்நாடகா, அசாம் போன்ற மாநிலங்களைப் போன்று தமிழக தேயிலை தோட்ட கழகமும் (டான்டீ) இங்குள்ள தேயிலை எஸ்டேட்டுகளை ஏற்று நடத்த வேண்டும். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு கணிசமான ஊதியம் கிடைப்பதுடன் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.

தரமான சிகிச்சை வேண்டும்

ஊத்துவை சேர்ந்த தொழிலாளி தெரசா அம்மாள்:-

நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறேன். இங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தினக்கூலியாக ரூ.410 தருகின்றனர். அவற்றை மாதந்தோறும் தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கின்றனர். தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பணியாற்றுகிறோம். மதியம் 1 மணி நேர உணவு இடைவேளை வழங்கப்படுகிறது.

எங்களுடைய குழந்தைகள் ஊத்துவில் உள்ள தொடக்கப்பள்ளியிலும், மாஞ்சோலை அரசு உயர்நிலைப்பள்ளியிலும் படித்த பின்னர் மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்பை அம்பை, கல்லிடைக்குறிச்சி, பாபநாசம் போன்ற வெளியூர்களில் விடுதியில் தங்கியிருந்து படிக்கின்றனர். நாங்கள் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறையில் வெளியூர்களில் தங்கி படிக்கும் குழந்தைகளை பார்த்து வருவோம்.

உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மாஞ்சோலை, ஊத்துவில் உள்ள ஆஸ்பத்திரிகளிலும், மேல் சிகிச்சைக்காக அம்பை, நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று சிகிச்சை பெறுகிறோம். மாஞ்சோலையில் ஆம்புலன்ஸ் வசதி இருந்தாலும், குண்டும், குழியுமான சாலையில் பயணித்து வருவதற்கு நீண்ட நேரமாகிறது. எனவே மாஞ்சோலை, ஊத்துவில் உள்ள ஆஸ்பத்திரிகளை மேம்படுத்தி தொழிலாளர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்.

குண்டும், குழியுமான சாலை

தேயிலை தோட்ட தொழிலாளியும், வார்டு கவுன்சிலருமான ஸ்டாலின்:-

நாங்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்தாலும் எங்களுக்கு என்று சொந்த நிலம் கிடையாது. இங்குள்ள தொழிலாளர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து தங்கியிருந்து வேலை செய்கின்றனர். இதனால் எங்களுக்கு அரசின் சலுகைகள், மானியங்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. எங்களுக்கு மலையிலோ அல்லது மலையடிவாரத்தில் உள்ள ஊர்களிலோ அரசு இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும்.

மலையில் சில இடங்களில் மட்டுமே பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னல் கிடைக்கிறது. 4 ஜி இணையதள சேவை கிடைப்பது இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியவில்லை. எனவே, மலையில் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களிலாவது இணையதள சேவை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேயிலை எஸ்டேட் நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் தங்குவதற்கு இலவச வீடு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளனர். எனினும் மலையில் உள்ள சாலைகள் முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவசர தேவைக்கு மணிமுத்தாறுக்கு வாகனத்தில் செல்வதற்கு பல மணி நேரம் ஆகிறது.

மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள வளைவில் இருந்து மாஞ்சோலை வரையிலும் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைப்பதற்கு ரூ.5.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பல மாதங்களாகியும் இன்னும் எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, சாலை பணிகளை விரைந்து தொடங்கி நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து மாஞ்சோலையில் இருந்து ஊத்து வரையிலும் புதிய சாலை அமைக்க வேண்டும்.

நிவாரணத்தொகை

தோட்ட தொழிலாளி ராணி:-

நாங்கள் மலையில் தேயிலை பறிக்கும்போது வனவிலங்குகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. யானை, சிறுத்தை, கரடி போன்றவற்றால் பலரும் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேயிலை பறித்த பெண்ணை சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

வனவிலங்குகளால் தாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு போதிய நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. எனவே, வனவிலங்குகளால் தாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story