திருமானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரப்படுமா?
மழைநீரை முழுமையாக தேக்கி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த திருமானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரைவெட்டி ஏரி
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் கடந்த 1958-ம் ஆண்டு திருச்சி மாவட்டம், முசிறி வாத்தலை அருகே காவிரியின் தண்ணீர் சமயபுரம் புதூர் உத்தமனூர் வழியாக புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் மானோடை ஏரிக்கு வந்து நிறைவடைந்து, பின்னர் வெங்கனூர் ஆண்டி ஓடை ஏரி நிரம்பி 1,100 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரைவெட்டி ஏரிக்கு தண்ணீர் வரும். பின்னர் இறுதியாக சுக்கிரன் ஏரி சென்று தூத்தூர் அருகே கொள்ளிடத்தில் உபரி நீர் கலக்கிறது.
திருமானூர் டெல்டா பகுதிகளில் ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கர் நேரடியாகவும், மறைமுகமாகவும் நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம், கம்பு, துவரை, எள், கடலை, வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடிக்கும் பேருதவியாக இருந்து வருகிறது. இந்த ஏரியால் பயன்பெறும் விவசாய நிலங்கள் வெங்கனூர் கோவில் எசனை இலந்தைக்கூடம், கரைவெட்டி, ஆங்கியனூர், வேட்டைக்குடி, கரைவெட்டி, பரதூர், மேலக்காவட்டாங்குறிச்சி, கீழக்காவட்டாங்குறிச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான நீர்த்தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
பறவைகள் சரணாலயம்
மேலும் மழைக்காலங்களில் வரும் மருதையாற்று உபரி நீரை கரைவெட்டி ஏரிக்கு கொண்டு வர கிழக்கே சுக்கிரன் ஏரி வரை ஏறத்தாழ பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 27 நீர்நிலைகளிலும், தண்ணீரைச் சேகரிக்க இயலும். மேலும் இதனால் முப்போகமும் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பேருதவியாக இருப்பதோடு நிலத்தடி நீர் மட்டம் உயரும். கோடை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய இயலும்.
வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 18 (1) இன் படியும் அரசு ஆணை எண்-219, சுற்றுச்சூழல் மற்றும் வனத் (FR.VI) துறை, நாள் 10.06.1997 இன் படியும் கரையவெட்டி பறவைகள் சரணாலயம் 453.71 ஹெக்டேர் 1100 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அறிவிக்கப்பட்டது.
இச்சரணாலயம் அடிப்படையில் ஒரு பாசன ஏரியாகும். இந்த ஏரி, செப்டம்பர் மாதம் முதல் மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் பெறுகின்றது. மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவக்காற்று மூலமும் கூடுதலாக நீரைப்பெறுகிறது. எனவே கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரி உள்ளிட்ட திருமானூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகள் அனைத்தையும் முழுமையாக தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்ற காலம்
இதுகுறித்து கீழப்பழுவூர் அருகே உள்ள சேனாபதியை சேர்ந்த விவசாயி வேலுமணி கூறுகையில், இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும். அருகிவரும் பட்டைதலை வாத்து, இந்த ஏரியின் முக்கிய வருகையாளர்களுள் ஒன்றாகும். இச்சரணாலயத்தைப் பார்வையிட ஏற்ற காலம் அக்டோபர், மார்ச் மாதங்கள் ஆகும் என்றார்.
கீழகவட்டாங்குறிச்சியை சேர்ந்த அய்யப்பன் கூறுகையில், பொதுப்பணித்துறைக்கு சம்மந்தமான திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 27 ஏரிகளையும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வரத்து வாய்க்கால்களை தூர்வாரி பழுதடைந்த மதகுகள் சட்டர்களை சீரமைத்திட உறுதியான நடவடிக்கைகள் வேண்டும் என்றார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரைவெட்டியை சேர்ந்த நேரு என்பவர் கூறுகையில், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சிறு, குறு ஏரிகளும், குளங்களும் 100-க்கும் மேல் உள்ளது. இவற்றினையும் தூர்வாரிட உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீர்மேலாண்மை திட்டத்தில் அண்மையில் பாரத பிரதமர் மோடி அறிவித்த திட்டத்திலாவது சேர்த்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து நீர்நிலைகளை தூர்வாரிட உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி அருகே மருதையாற்று கரையோரம் வெட்டி முடிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை நீர்த்தேக்கங்களாக மாற்றிட மழைக்காலங்களில் வரும் உபரிநீரை முழுமையாக தேக்கி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திட விவசாய நிலங்களின் பரப்பு அதிகரிக்கும் வீணாக கடலில் கலக்கும் நீரை பயன்படுத்திட உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.