திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுமா?


திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுமா?
x

சென்னை எழும்பூரிலிருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

சென்னை எழும்பூரிலிருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகையாகும். இந்த பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். சென்னையில் தங்கி இருக்கும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழித்தடத்தில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை வழியாக தூத்துக்குடி மற்றும் மதுரைக்கு சிறப்பு ரெயில்களை 12.1.2023 முதல் 18.1.2023 வரை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இணைப்பு ரெயில்

திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி அகல ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டுகளுக்கு இரவு நேர பணிக்கு கேட்மேன்கள் நியமிக்கப்படாத காரணத்தால் சிறப்பு ரெயில்களை பகல் நேரத்தில் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பஸ்களில் இட நெருக்கடி இருப்பதன் காரணமாகவும், தனியார் பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் சிறப்பு ரெயில்களை இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

ரெயில்வே துறைக்கும் வருமானம் கிடைக்கும். மேலும் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை, சென்னை எழும்பூர் வரை செல்லும் சோழன் அதிவிரைவு ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக மயிலாடுதுறையில் மாறி செல்லும் வகையில் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

பயனுள்ள வகையில்...

இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் தெற்கு ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியருப்பதாவது, 'கடந்த தீபாவளி பண்டிகையின்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கு தெற்கு ரெயில்வே திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி அகல ரெயில் பாதையில் சிறப்பு விரைவு ரெயில்களை சென்னையிலிருந்து இயக்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.


Next Story