குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள்
கொடைக்கானல் புலியூர் பகுதியில், குட்டிகளுடன் காட்டு யானைகள் வலம் வருவதால் மலைக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. புல்வெளிகள் புத்துணர்வு பெற்று வளர்கின்றன. இதுமட்டுமின்றி மரம், செடி, கொடிகளும் அடர்ந்து படர்ந்து பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கிறது.
இந்தநிலையில் பழனி வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புலியூர் கிராமத்துக்கு படையெடுத்துள்ளன.
தற்போது இந்த யானைகள், புலியூர் பகுதியில் உள்ள வருவாய்த்துறை மற்றும் விவசாய நிலங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2 நாட்களாக யானைகள் முகாமிட்டு இருப்பதால் விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.