தேவர்சோலை, நெலாக்கோட்டையில் வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்


தேவர்சோலை, நெலாக்கோட்டையில் வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை, நெலாக்கோட்டையில் காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தி தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

தேவர்சோலை, நெலாக்கோட்டையில் காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தி தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

காட்டு யானைகள்

கூடலூர் தாலுகா தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி மட்டம், பேபி நகர் பகுதியில் முதுமலை வனத்தில் இருந்து காட்டு யானை ஒன்று தினமும் ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பல வாரங்களாக இதே நிலை நீடிப்பதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினரும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் காட்டு யானை இரவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு வந்த காட்டு யானை அப்பகுதியில் நின்றிருந்த பாக்கு மரங்களை சரித்து தின்றது. இதில் ஒரு மரம் ஆளில்லாத வீட்டின் மீது விழுந்தது. ஆனால் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். எனவே காட்டு யானை ஊருக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வாகனங்களை மறித்தது

இதேபோல் தேவர்சோலையில் இருந்து கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் உள்ள நெலாக்கோட்டையில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்தது. தொடர்ந்து நெடுஞ்சாலையில் நின்று வாகனங்களை வழிமறித்தது. மேலும் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியது.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ¼ மணி நேரம் அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை தேயிலை தோட்டம் வழியாக அங்கிருந்து சென்றது. அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. இருப்பினும் காட்டு யானை அடிக்கடி அப்பகுதியில் வருவதால் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story