நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து அவ்வப்போது நீர் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன்காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,294 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.51 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடியும், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசனத்துக்காக வினாடிக்கு 800 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 552 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.66 அடியாக உயர்ந்தது. பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடியும், தடப்பள்ளி அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசன பகுதிக்கு வினாடிக்கு 800 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.