குமரியில் பரவலாக மழை


குமரியில் பரவலாக மழை
x

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக களியல் பகுதியில் 38.8 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி பெய்து வந்தது. கடந்த சில வாரங்களாக மாவட்டம் முழுவதும் அவ்வபோது கனமழை பெய்து வருகிறது. மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

நேற்றுமுன்தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பூதப்பாண்டி, தக்கலை, சுருளோடு, திற்பரப்பு, குழித்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காண்ப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 38.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

ஏற்கனவே பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த மழை நீர் தற்போது முற்றிலுமாக வடிந்துள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று 2-வது நாளாக தண்ணீர் திறந்துவிடப்பட்டன. மழையால் களியல் மற்றும் திற்பரப்பு பகுதியில் மொத்தம் 2 பழமையான வீடுகள் இடிந்துள்ளன. இடிந்த வீடுகள் மக்கள் பயன்பாடு இல்லாதது ஆகும்.

அணைகளின் நீா்வரத்து

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிற்றார் 1- 2.2, சிற்றார் 2- 4, பூதப்பாண்டி- 10.2, குழித்துறை- 36, பெருஞ்சாணி-22.2, புத்தன்அணை-19.8, சுருளோடு-1.6, தக்கலை- 2.1, பாலமோர்- 3.4, திற்பரப்பு-38.5, அடையாமடை- 11.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது. மேலும் நேற்று காலை பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.42 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 220 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 71.15 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 396 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.58 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு முழு கொள்ளளை எட்டி அணையில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு 18 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்த பாசனத்துக்காக வினாடிக்கு அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி நீர் குடிநீர் தேவைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 11.3 கனஅடி நீர் வருகிறது.


Next Story