108 ஆம்புலன்ஸ் வாகன திட்டத்தை கொண்டு வந்தவர் யார்?அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்ட வாகனத்தை கொண்டு வந்தவர் கருணாநிதிதான் என திருவண்ணாமலையில் பன்னோக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்ட வாகனத்தை கொண்டு வந்தவர் கருணாநிதிதான் என திருவண்ணாமலையில் பன்னோக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
சிறப்பு மருத்துவ முகாம்
முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
முன்னதாக அவர் பேசியதாவது:-
தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த முகாம் நடைபெறுகிறது. அவரது ஆட்சியில் தான் மருத்துவத் துறைக்கு பல்வேறு வகையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
கிராமப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டன. அதேபோல் அவரது ஆட்சியில் தான் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் அதோடு இணைந்து 62 மருத்துவமனைகள் இருக்கின்றது.
கண்ணொளி திட்டம்
ஒரு காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கண் மருத்துவமனை கிடையாது. புதுச்சேரி மற்றும் வேலூருக்கு தான் கண் அறுவை சிகிச்சை செய்ய செல்ல வேண்டி இருந்தது. தலைவர் ஆட்சிக்கு வந்தவுடன் திருவண்ணாமலையில் முதன்முதலாக 1973-ல் இங்கே முகாம் நடத்தி கண் பரிசோதனை மேற்கொண்டு கண்ணொளி திட்டத்தை அவர் கொண்டு வந்தார்.
நமக்கு கண்ணுக்கு தெரியாத விஷயம். ஆனால் கண்ணுக்கு தெரிஞ்ச விஷயம் என்னவென்றால் நமக்கு ஆபத்து என்று போன் செய்தால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்து நிற்கும். அதற்கு காரணம் தலைவர் தான்.
அதுமட்டுமல்ல 37 மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் அல்லாமல் 1353 ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கியது இந்த திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். சென்னை கிண்டியில் உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்று சொல்லி எனது துறை சார்பாக ரூ.230 கோடி செலவில் ஒரு மருத்துவமனையை கட்டி கலைஞர் பெயரில் கடந்த 15-ந் தேதி முதல்- அமைச்சர் திறந்து வைத்து டெல்லி எய்ம்ஸ் மற்றும் தனியார் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை திராவிட மாடல் அரசு கொண்டு வந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.க்கள்
இதில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பார்வதி சீனுவாசன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) பாபுஜி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) செல்வக்குமார், மாநில கைப்பந்து சங்கத்துணைத்தலைவர் இரா.ஸ்ரீதர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கார்த்திவேல்மாறன், முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ரகுநாத், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.