'திராவிட மாடல் என்று சொன்னால் காலமெல்லாம் எனது முகம்தான் நினைவுக்கு வரும்' முதல்-அமைச்சர் பெருமிதம்


திராவிட மாடல் என்று சொன்னால் காலமெல்லாம் எனது முகம்தான் நினைவுக்கு வரும் முதல்-அமைச்சர் பெருமிதம்
x

திராவிட மாடல் என்று சொன்னால் காலமெல்லாம் எனது முகம்தான் நினைவுக்கு வரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை,

ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் அவர், ரூ.118.40 கோடி செலவில் கட்டப்பட்ட ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகம், ரூ.32.18 கோடி செலவில் முடிவுற்ற 23 பணிகளை திறந்து வைத்தார்.

ரூ.22.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 71 ஆயிரத்து 103 பேருக்கு ரூ.267.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விளம்பர பிரியரா?

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

'ஸ்டாலின் விளம்பரப் பிரியராக இருக்கிறார்' என்று சொல்கிறார்கள். எனக்கு எதற்கு விளம்பரம்? 55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கக்கூடியவன் நான். இனிமேல் எனக்கு விளம்பரம் எதற்கு? நரிக்குறவர் வீட்டுக்குப் போனார், இருளர் வீட்டுக்குப் போனார், அவர்கள் வீட்டில் சாப்பிட்டார் என்றெல்லாம் வரும் செய்திகளை வைத்து அப்படி சொல்கிறார்கள். அந்த ஒரு சந்திப்புக்குப் பின்னால் எத்தனை நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் முதலில் அறிந்திருக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தினுடைய இதயம் என்பது இத்தகைய விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில்தான் இருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுப்பதும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானது. இவை விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது அல்ல.

எனது படத்தை போட்டால்...

பிள்ளைகளுக்குக் கொடுக்கும் புத்தகப் பைகளில், கடந்த ஆட்சியைப் போல, முதல்-அமைச்சரான நான் எனது படத்தை போட்டுக் கொண்டு இருந்தால், அதை விளம்பரம் என்று சொல்லலாம். பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர்களின் படத்தை அச்சிட்டுத் தயாரிக்கப்பட்ட பைகள் இன்னமும் மீதம் இருக்கிறது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர், அதிகாரிகள் என்னிடத்தில் வந்து சொன்னார்கள்.

நான் உடனே சொன்னேன். அதைப் பயன்படுத்தாமல் போனால் ரூ.17 கோடி அரசுக்கு வீண் இழப்பீடு ஏற்படும், செலவு ஏற்படும், பணம் வீணாகும், பரவாயில்லை, முன்னாள் முதல்-அமைச்சர்கள் படமே இருக்கட்டும் என்று சொல்லி, அந்தப் பைகளைக் கொடுக்கச் சொன்னவன்தான் இந்த ஸ்டாலின் என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

என் முகம் நினைவுக்கு வரும்

விளம்பரங்கள் எனக்குத் தேவையில்லை. ஏற்கனவே கிடைத்த புகழையும் பெருமையையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினால் போதும் என்று நினைப்பவன் நான். திராவிட மாடல் என்று சொன்னால், காலமெல்லாம் இந்த ஸ்டாலின் முகம்தான் நினைவுக்கு வரும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொன்னால் போதும். உங்களுக்கு என் குரல் நினைவுக்கு வரும்.

27 சதவீத இடஒதுக்கீட்டை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது யார்? என்றால், என் முகம்தான் நினைவுக்கு வரும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்பது, யார் ஆட்சிக் காலத்தில் அமலானது? என்று கேட்டால், என்முகம்தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டின் அம்பேத்கரான பெரியாருக்கும், இந்தியாவின் பெரியாரான அம்பேத்கருக்கும், அவர்களது பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், சமத்துவ நாளாகவும் அறிவித்தது யார்? என்றால், என் பெயர் தான் நினைவுக்கு வரும்.

கையில் காசு இல்லை என்றாலும் போகவேண்டிய இடத்திற்கு போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையுடன், பேருந்துகளில் ஏறும் பெண்களுக்கு எந்நாளும் என் முகம்தான் நினைவுக்கு வரும். நான் என்று சொல்வது தனிப்பட்ட இந்த ஸ்டாலின் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நாம் அனைவரும் சேர்ந்த கூட்டுக்கலவைதான் நான். என்றும் உங்களில் ஒருவன்தான் நான். முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் மட்டும் நான் அல்ல, உங்கள் அனைவரது சேர்க்கையாக நான் அமர்ந்திருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து நடத்தும் ஆட்சி தான் இது. நமக்கான ஆட்சி தான் இது.

சக்தியை மீறி உழைப்பேன்

இந்த ஆட்சியானது கடந்த 10 ஆண்டு காலமாக, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சரிவைச் சீர் செய்து கொண்டிருக்கிறது. பள்ளத்தை நிரப்பி வருகிறது. துன்பங்களை போக்கி வருகிறது. தொய்வைத் துடைத்து வருகிறது. அதே சமயத்தில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க எந்நாளும் உழைத்து வருகிறது. மீண்டும் சொல்கிறேன், நேற்றைக்கும் சொன்னேன், என் சக்தியை மீறியும் உங்களுக்காக உழைப்பேன், உழைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, தி.மு.க. எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் முனிரத்தினம், ஈஸ்வரப்பன், நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அதிகாரி குமரேஸ்வரன் நன்றி கூறினார்.


Next Story