ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் திறப்பது எப்போது?
விக்கிரமங்கலம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் காட்சி பொருளாக உள்ளது. இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து உள்ளனர்.
துணை சுகாதார நிலையம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமம் உள்ளது. இப்பகுதி மக்களின் நலனுக்காக கீழத்தெருவில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கீழநத்தம், ஆலவாய், சாலைகிராமம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், சிறுவர்கள் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் விபத்து மற்றும் அவசர காலங்களில் இப்பகுதி மக்கள் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரியலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கோ செல்வதற்கு முன்பாக கீழத்தெருவில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
கட்டிடம் திறப்பது எப்போது?
பல ஆண்டுகளாக இந்த துணை சுகாதார நிலையத்திற்கென்று தனி கட்டிடம் ஏதும் கட்டப்படாமல் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் தங்கும் இல்லத்துடன் கூடிய துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. 2 அடுக்கு மாடி கொண்ட இந்த துணை சுகாதார நிலையத்தின் மேல் பகுதியில் கிராம செவிலியர் தங்குவதற்காகவும், கீழே மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டன. கடந்த 2018-2019-ம் நிதியாண்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் இதுவரை திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து உள்ளனர்.