போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு எப்போது?
ஏழாயிரம்பண்ணையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து ெநரிசல்
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் தொடர்ந்து ஏற்படும் போக்குவரத்து நெரிசலினால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சிரமப்படுகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பழைய ஏழாயிரம் பண்ணையில் இருந்து மாரியம்மன் கோவில் பஸ்நிறுத்தம், போலீஸ் நிலையம் வரை 2 கிலோமீட்டர் தூரம் இருந்த ஆக்கிரமிப்புகள் சாத்தூர் நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றப்பட்டன.
பின்னர் சில நாட்கள் மட்டும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிரந்தர தீர்வு
இந்தநிலையில் சாலையில் கடைகளுக்கு முன்பாக 2 புறங்களிலும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவு நிறுத்தப்படுகின்றன. இதனால் சாத்தூரில் இருந்து கோவில்பட்டி, சங்கரன்கோவில் செல்லும் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன. தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அந்த வழியாக செல்பவர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
எனவே சாலை ஓரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கவும், காலை, மாலை வேளையில் நிரந்தரமாக போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.