ஜமாபந்தி நிறைவு நாளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


ஜமாபந்தி நிறைவு நாளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

ஆரணியில் ஜமாபந்தி நிறைவு நாளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் கடந்த 19-ந்தேதி முதல் நேற்று வரை நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமையில் மனுக்கள் பெறப்பட்டன.

அதைத் தொடர்ந்து நேற்று மாலையில் ஜமாபந்தி நிறைவையொட்டி விவசாயிகள் மாநாடு உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமையில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமாரவேல், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர், அக்ராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தாட்சாயணி அன்பழகன், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 987 குறைமனுக்கள் பெறப்பட்டன. அதில் தற்போது 220 பேருக்கு ரூ.45 லட்சத்து 92 ஆயிரத்து 720 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

விழாவில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, மண்டல துணை தாசில்தார்கள் சங்கீதா, தரணிகுமரன், பிரியா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் பாலாஜி நன்றி கூறினார்.


Next Story