273 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


273 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 9 March 2023 12:15 AM IST (Updated: 9 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொட்டமஞ்சி மலை கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 273 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தொட்டமஞ்சி மலை கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 273 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா தொட்டமஞ்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா திட்ட விளக்கவுரையாற்றினார். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நல உதவிகள் குறித்து துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.

முகாமில் கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-

தொட்டமஞ்சி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கடந்த வாரம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களுக்கு தீர்வு காணும் விதமாக தகுதியான மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மலைகிராம பகுதியில் கல்வியறிவு 57 சதவிகிதமாக உள்ளதால் தங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்.

இளம்வயது திருமணம்

கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் தளி பகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழிற்நுட்ப கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார். மேலும், பெண்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு கல்வியறிவு அளித்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.

இந்த மலை கிராமங்களில் இளம்வயது திருமணம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் செய்வோர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதால் கல்வி இடைநிற்றலை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நல உதவிகள்

இந்த முகாமில் 273 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 58 ஆயிரத்து 816 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

இதில் தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குனர் சேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகரத்தினம், விமல்ரவிக்குமார், தாசில்தார் அனிதா மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story