ஈரோட்டில் 2,666 தொழிலாளர்களுக்கு ரூ.41½ லட்சம் நலத்திட்ட உதவிகள்- நல வாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார்


ஈரோட்டில் 2,666 தொழிலாளர்களுக்கு ரூ.41½ லட்சம் நலத்திட்ட உதவிகள்- நல வாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார்
x

ஈரோட்டில் 2 ஆயிரத்து 666 தொழிலாளர்களுக்கு ரூ.41½ லட்சம் நலத்திட்ட உதவிகளை கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார்.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் 2 ஆயிரத்து 666 தொழிலாளர்களுக்கு ரூ.41½ லட்சம் நலத்திட்ட உதவிகளை கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தொழிலாளர் நலத்துறை, கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் துறை இணை ஆணையாளர் சசிகலா வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திறன் மேம்பாட்டு பயிற்சி

கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ரூ.5 ஆயிரம் கோடி நிதி உள்ளது. 60 வயது கடந்த வாரிய உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில், கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக செங்கல்பட்டில் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக செயல்படவில்லை. விரைவில் அந்த நிறுவனம் செயல்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் நலவாரிய உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட 6 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. கடந்த ஒரே ஆண்டில் 5 லட்சம் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.420 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. கட்டுமான தொழிலுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளதால், தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஜி.எஸ்.டி. நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.41½ லட்சம்

விழாவில் கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என 2 ஆயிரத்து 666 பேருக்கு ரூ.41 லட்சத்து 48 ஆயிரத்து 883 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையாளர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story