கடின முயற்சியை மேற்கொள்வதன் மூலம் நம்முடைய இலக்கை அடைய முடியும் மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை


கடின முயற்சியை மேற்கொள்வதன் மூலம் நம்முடைய இலக்கை அடைய முடியும்  மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடின முயற்சியை மேற்கொள்வதன் மூலம் நம்முடைய இலக்கை அடைய முடியும் என்று மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சமூக நலத்துறை ஆகியவை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியை மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் போன்ற தடகள போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவிகள் 800-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளையாடினர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

முயற்சிகள்

முன்னதாக கலெக்டர் மோகன் பேசுகையில், மாணவ- மாணவிகள் படிப்பு மற்றும் விளையாட்டு எதுவாக இருந்தாலும் நான் முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட வேண்டும். அதுதான் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். இதுமட்டுமல்லாமல் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும் அறிவியல், கணிதம் தொடர்பாக புதியனவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் வானவில் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் கல்வியானாலும், விளையாட்டானாலும் கடினமாக முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் நாம் நினைக்கின்ற இலக்கை அடைய முடியும். ஒவ்வொரு மாணவரும் கடினமாக உள்ளது என்று சோர்ந்து போகாமல் துன்பத்திற்கே நாம் துன்பத்தினை தரும் வகையில் நம்முடைய முயற்சிகள் இருந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story