பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்-இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. மனு


பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்-இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. மனு
x

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.

திருநெல்வேலி

அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், அம்பை தொகுதி எம்.எல்.ஏ.வுமான இசக்கி சுப்பையா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினார். அதில் கூறி இருப்பதாவது:-

அம்பை சட்டமன்ற தொகுதி விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். இதில் கன்னடியன் கால்வாய், வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி கால்வாய்களின் பாசனத்தை நம்பி இருபோக சாகுபடி செய்யப்படும். விவசாயத்தை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியில் நெல் பயிர் சாகுபடி செய்வதற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால் நடப்பாண்டில் மழை இல்லாமல் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. எனவே விவசாய நலன் கருதி உடனடியாக அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும். பாபநாசம், அம்பை, சேரன்மாதேவி பகுதி கால்வாய்கள் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். தண்ணீர் திறப்புக்கு முன்பு கால்வாய் பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள அமலைச்செடி ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வேகமாக கடைமடை வரை செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது, மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன் பாபு, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், தலைமை கழக பேச்சாளர் மின்னல் மீனாட்சி, கன்னடியன் கால்வாய் விவசாய சங்க தலைவர் பாவநாசம், செயலாளர் கண்ணாயிரம் நயினார், நிர்வாகி முத்துப்பாண்டி, மகாலிங்கம் மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.

இதேபோல் அம்பை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அம்பை பகுதியை சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 7 பேருக்கு கல்வி உதவித்தொகையும், 2 பேருக்கு மருத்துவ உதவித்தொகையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு உபகரணங்கள் வாங்கவும் என 10 பேருக்கு மொத்தம் ரூ.1 லட்சம் நிதி உதவியை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.

அம்பை ஒன்றிய செயலாளர் விஜய பாலாஜி, நகர செயலாளர் அறிவழகன், அம்பை நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் மாரிமுத்து, மணிமுத்தாறு நகர செயலாளர் ராமையா, அம்பை ஒன்றிய துணை செயலாளர் பிராங்களின், அடையகருங்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவர் மதனகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story