பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x

பாரூர் ஏரியில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இதன் மூலம் 2397.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

பாரூர் ஏரியில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இதன் மூலம் 2397.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அதன்படி, நேற்று பாரூர் பெரிய ஏரியில் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீரை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

பாரூர் பெரிய ஏரியில் தற்போது உள்ள நீர் இருப்பு மற்றும் கால்வாயில் வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தை கொண்டும் மேலும், பருவ மழையை எதிர்நோக்கியும் வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி முடிய 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி ஏரியில் கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கனஅடி வீதமும் என மொத்தம் 70 கனஅடி வீதம் 3 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

7 ஊராட்சிகள்

இதன் மூலம் பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளில் உள்ள 2397.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, பாரூர்ஏரி பாசன உதவி பொறியாளர் சையத் ஜஹ்ருதீன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் வி.ஜி.ராஜேந்திரன், துணை செயலாளர் தட்ரஅள்ளி நாகராஜ், பாசன விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story