ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
பென்னாகரம்:
கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய ெதாடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த போதிலும் ெமயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர். ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.