ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
பென்னாகரம்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனிடையே நேற்று முன்தினம் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதால் நேற்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கோத்திக்கல் வரை காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்று மகிழ்ந்தனர். எனினும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து சென்றனர்.