கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்தது
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 6 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 6 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் அணைக்கு வரவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.
இதனிடையே கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு வினாடிக்கு 3,066 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 2,091 கனஅடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 49.40 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
இதனால் அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றிலும் வினாடிக்கு 1,856 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியது. அணைக்கு வர 6 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் ஏராளமானோர் குவிந்தனர்.