நீலகிரியில் கோவில்களில் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி நீலகிரியில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.
கூடலூர்,
சந்திர கிரகணத்தையொட்டி நீலகிரியில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.
சந்திர கிரகணம்
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நேற்று மதியம் 2.38 மணி முதல் மாலை 6.30 மணி வரை நிகழ்ந்தது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடை அடைக்கப்பட்டு மூடப்பட்டது.
கூடலூர் பகுதியில் மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன், ஸ்ரீ சக்தி விநாயகர், சக்தி முனீஸ்வரர், நந்தட்டி சிவன் கோவில், புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களின் நடைகளும் அடைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடைகள் திறக்கப்பட்டு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆனால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நடை அடைப்பு
கிரகண நேரத்தில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. சந்திர கிரகணத்தையொட்டி கோவில்கள் நேற்று மதியம் 12 மணி முதல் நடை அடைக்கப்பட்டது. இதேபோல் ஊட்டியில் மாரியம்மன் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், வேணுகோபால சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், எல்க்ஹில் முருகன் கோவில், கோடப்பமந்து விநாயகர் கோவில், சீனிவாச பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களின் நடை அடைக்கப்பட்டன. இதனால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.
பரிகார பூஜை செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் நடை அடைக்கப்பட்டு இருந்தது.
கிரிவலம்
கூடலூர் பகுதியில் நேற்று 2-வது நாளாக சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. கூடலூர் நந்தட்டியில் காலை முதல் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிவலிங்க திருமேனியில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இதேபோல் நம்பாலக்கோட்டை சிவன்மலையில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.