வாக்களிப்பது ஜனநாயக கடமை
வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை பெற்றோர்களுக்கு, பள்ளி மாணவர்கள் உணர்த்த வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேர்தல் கல்வியறிவு குழுவின் சார்பில் வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி மாணவிகளுக்கு தேர்தல் குறித்த பயிற்சி நூல்களை வழங்கினார்.
இதையடுத்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
நமது ஜனநாயக கடமை
நாம் நமது வாக்கினை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வாக்களிப்பதினால் நம்முடைய தலையெழுத்து என்னவாகும் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். கடமைக்கு ஒரு நாள் தானே என்று வாக்களித்து வந்து விடக்கூடாது. நம்மை ஆட்சி செய்பவர்கள் எத்தகைய நல்லாட்சி தருவார்கள், யாருக்கு வாக்களித்தால் சிறப்பாக இருக்கும் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை அறிந்து, அதை உங்களின் பெற்றோர்களுக்கும் உணர்த்த வேண்டும் என கூறினார். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப்-கலெக்டர் பானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.