விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல் அனுமந்தநகரில் உள்ள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அனுமந்தநகரில் சர்வசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் பெண்கள் முளைப்பாரி எடுத்து, புனிததீர்த்தங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து மங்கள இசையுடன் அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் முதல்கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில் நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் திருச்செந்தூர், அழகர்கோவில், ராமேசுவரம், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருமலைக்கேனி, கொடுமுடி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள், வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் வலம் வந்தது. அதன்பிறகு கோபுர கலசத்திற்கு புனிதநீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது கைலாச சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதேபோல் மூலவருக்கு கலசத்தில் இருந்த புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதில், திண்டுக்கல் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜசேகரன், தொழில் அதிபர் சதீஷ், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜ், 10-வது வார்டு உறுப்பினர் பாலமுருகன் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு தலைவர் சண்முகம், செயலாளர் சின்ராஜ், பொருளாளர் பழனிசாமி, இயக்குனர்கள் பிச்சை, ராஜகோபால், துணைத்தலைவர் அந்தோணி, துணை செயலாளர் மாரிமுத்து, நிர்வாகக்குழுவினர் கார்த்திக், ராஜசேகர், ராஜ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.