அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் மறியல்


அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் மறியல்
x

அடிப்படை வசதிகள் கேட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

அடிப்படை வசதிகள்

கறம்பக்குடி ஒன்றியம் கரு.கீழத்தெரு ஊராட்சியில் குரும்பிவயல், கருக்காக்குறிச்சி ஆதிதிராவிடர் காலனி, மஞ்சு காடு, அரங்குளன் மஞ்சுவயல், திருமுருகபட்டினம், நல்லாண்டார் கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களுக்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

மறியல்

எனவே அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும், பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைக்கு மாறாக ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் மாற்று இடத்தில் கட்ட பணி ஆணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி மக்கள் நேற்று காலை கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, வட்டார வளர்ச்சி அதிகாரி கருணாகரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்த கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story