கும்மிடிப்பூண்டி அருகே இறால் தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


கும்மிடிப்பூண்டி அருகே இறால் தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x

கும்மிடிப்பூண்டி அருகே இறால் தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுதூர் ஊராட்சியை சேர்ந்தது கொண்டமாநல்லூர் கிராமம். இந்த கிராமத்தின் எல்லையையொட்டி உள்ள பூவலை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையின், கழிவு நீரானது கொண்டமாநல்லூர் பகுதியில் உள்ள வயல்வெளிகளில் விடப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள குடிதண்ணீர் உள்பட நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், சொறி, சிரங்கு, அரிப்பு போன்றவைகளால் உடலில் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கனவே மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

இந்த நிலையில், மேற்கண்ட தொழிற்சாலையை மூட வலியுறுத்தி கொண்டமாநல்லூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் நேற்று அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், தாசில்தார் கண்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் சார்பாக பேசிய சாணாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா பிர்லாவிடம் ஆய்விற்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தங்களது 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story