சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள்


சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள்
x

சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

திருச்சி

மகா சிவராத்திரி

சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் மகா சிவராத்திரியும் ஒன்று. இந்த வருடம் மகா சிவராத்திரி நாளை (சனிக்கிழமை) வருகிறது. அற்புதம் வாய்ந்த இந்த நன்னாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நாளை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பெரிய கோவில்களில் 4 கால பூஜைகளும், சில கோவில்களில் 6 கால பூஜையும் நடைபெற உள்ளன.

உறையூர் பஞ்சவர்ண சுவாமி

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் 4 கால பூஜைகள் நாளை இரவு நடக்கிறது. இரவு 10 மணிக்கு முதல் காலபூஜை மற்றும் ருத்ரயாகம் நடக்கிறது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜை, அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜை, அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜை நடக்கிறது. உறையூர் பாண்டமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் முறையே இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2 மணி, மறுநாள் காலை 5 மணி என்று 4 கால பூஜைகள் நடைபெறுகிறது.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நாளை மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சனிப்பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சிவராத்திரியை முன்னிட்டு இரவு 10 மணிக்கு முதல்கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு 2-ம் காலபூஜையும், 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும், அதிகாலை 6 மணிக்கு வழக்கமான பூஜையும் நடைபெறுகிறது. மேலும் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்று, மதியம் 1 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

திருவானைக்காவல், திருவெறும்பூர், லால்குடி

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கொடிமர மண்டபம் மற்றும் கண்ணுக்குட்டி மண்டபத்தில் நாளை இரவு நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் 4 சாமங்களிலும் சிவபூஜை நடத்துவார்கள். கோவில் வளாகத்தில் உள்ள நவராத்திரி கலைவிழா மண்டபத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவெறும்பூர் அருகே திருநெடுங்குளம் திருநெடுங்களநாதர் கோவிலில் முதல் கால பூஜையையொட்டி நாளை இரவு 7 மணிக்கு விநாயகர், நால்வர் மற்றும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 3 மணிக்கு 3-ம் கால பூஜை, நான்காம் கால பூஜை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் இரவு 9 மணிக்கு முதல் கால பூஜை, 11 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 1 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற உள்ளது. கூத்தைப்பாரில் மகாகாளீஸ்வரி கோவிலில் உள்ள 61 அடி உயர சிவலிங்கத்திற்கு 11 வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளுடன், முறையே இரவு 7 மணி, 11 மணி, 1 மணி மற்றும் 4 மணி என 4 கால பூஜைகள் நடக்கிறது. லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோவிலில் நாளை இரவு 9.30 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 11 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 3 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story