100 நாள் வேலைக்கு வந்த பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள்


100 நாள் வேலைக்கு வந்த பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள்
x

தியாகதுருகம் அருகே நண்பரிடம் அடமானம் வைத்த செல்போனில் 100 நாள் வேலைக்கு வந்த பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பணித்தள பொறுப்பாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தைசேர்ந்தவர் முருகேசன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மகன் வசந்தகுமார் (வயது 25). இவர் அதே பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில்(100 நாள் வேலை) பணித்தள பொறுப்பாளராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலைக்கு வரும் பெண்களை இவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வேலைக்கான வருகையை உறுதி செய்வது வழக்கம். அதன்படி வேலைக்கு வரும் ஏராளமான பெண்களை அவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்.

வீடியோ

இந்நிலையில் வசந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனை நண்பரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

அந்த செல்போனை அவரது நண்பர் பார்த்தபோது, அதில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் வேலைக்கு வரும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வைத்து இருந்தார். மேலும் சில பெண்களுடன் அவர் உல்லாசமாக இருப்பது போல் சித்தரித்து வைத்திருந்த வீடியோவும் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இது பற்றி ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசந்தகுமார் வீட்டை முற்றுகையிட்டனர். தொடர்ந்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையான வீரசோழபுரம் பிரிவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் வசந்தகுமாரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், வசந்தகுமாரை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் வசந்தகுமாரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அப்பகுதி மக்கள் மீண்டும் வந்து, கைது செய்யப்பட்ட வசந்தகுமாரை இங்கே அழைத்து வர வேண்டும் என்று கூறி சாலை மறியல் செய்தனர். அதற்கு போலீசார் மறுத்ததால், அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கைது

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் விரைந்து வந்து வசந்தகுமாரை கைது செய்து விட்டதாகவும், முக்கிய நபர்கள் மட்டும் வந்தால், வசந்தகுமாரை காட்டுவதாகவும் தெரிவித்தார். இருப்பினும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்கள், சிறிது நேரம் கழித்து சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட வசந்தகுமாருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story