பருவம் தவறி பெய்த மழையால் வெகுவாக குறைந்த உப்பு உற்பத்தி


பருவம் தவறி பெய்த மழையால் வெகுவாக குறைந்த உப்பு உற்பத்தி
x

வேதாரண்யத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. மேலும் உப்பு நிறமும் மங்கியதால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. மேலும் உப்பு நிறமும் மங்கியதால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உப்பு உற்பத்தி

நாகை மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்திக்கு சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, உற்பத்தியாளர்கள் மற்றும் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்து வருகிறது.

ஆண்டுதோறும் கோடைகாலத்தில் இங்கு உப்பு உற்பத்தி தொழில் தீவிரமாக நடந்து வரும். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்கியது முதல் உப்பு உற்பத்தி சிறப்பாக நடந்து வந்தது.

பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்பு

இந்த நிலையில் அண்மையில் பெய்த பருவம் தவறிய மழையால் உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. மேலும் உப்பின் நிறம் மங்கி, படிகமடையும் தன்மை தளர்ந்து உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

தற்போதைய மழையினால் உப்பு உற்பத்தி கடந்த ஒரு வாரமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீண்டும் மழை பெய்யும் பட்சத்தில் உப்பளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் உற்பத்தி தடைபடும் என்றும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய ஒளியே பிரதானம்

உப்பு உற்பத்திக்கு சூரிய ஒளியே பிரதானம், வானம் மேகமூட்டமாக காணப்பட்டால் அது உப்பு தட்டுப்பாட்டிற்கு வழிவகை செய்யக்கூடும் என்று வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்க தலைவர் வேதரத்தினம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்து பாதுகாக்கப்பட்டு எதிர் வரும் குளிர் காலத்தில் விற்பனை செய்யப்படும். மங்கிய நிறம் உப்பு சந்தையில் டன் ஒன்றிற்கு ரூ.3500 விற்கப்படுகிறது. மங்கிய நிலையில் இருந்தாலும் உற்பத்தி குறைந்துள்ளதால் இதற்கான தேவையை பூர்த்தி செய்ய இயலாது.

உப்பு தட்டுப்பாடு காணப்படும் இந்த நிலையில் தொழில் நிறுவனங்களின் உப்பிற்கான தேடல் அதிகரித்துள்ளது. மேலும் போதுமான அளவு இருப்பு இல்லாததால் இவை தொழில் நிறுவனங்களின் உப்பு தேவைகளில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

குளிர் காலத்தில் தட்டுப்பாடு

2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்டு மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி சிறப்பாக நடந்து வருகிறது. ஏற்றுமதியை தவிர்க்கும் பட்சத்திலும், குளிர் காலத்தில் உணவு பயன்பாட்டிற்கான உப்பின் பற்றாக்குறை அதிகமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி இந்த தட்டுப்பாடு உப்பு சார்ந்து தொழில் புரியும் நிறுவனங்களான கண்ணாடி, பாலியஸ்டர், பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் ஆகிய உற்பத்தி தொழில்களிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

பிற தொழில்களைபோன்று இல்லாமல் பருவ நிலையை மட்டுமே மூலதனமாகக்கொண்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட உப்பளங்களை மீண்டும் உற்பத்தி நிலைக்கு கொண்டு வருவதற்கு பெரும் பொருட்செலவு செய்து கடன் பட்டுள்ளோம். இந்த நிலையில் இதுபோன்ற உற்பத்தி காலத்தில் பெய்யும் பருவம் தவறிய மழை தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதித்துள்ளது.

இந்த பருவ நிலை மாற்றங்கள் இந்தியாவின் உப்பு உற்பத்தி மையமான குஜராத்திலும் 30 சதவீதம் அளவிற்கு உற்பத்தியை குறைந்துள்ளது. தற்போதைய அசானி புயலும் உற்பத்தியை மிகவும் மோசமாக பாதித்தது. உப்பின் தேவை அதிகமாக இருக்கும் நிலையிலும் உற்பத்தியாளர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் இல்லை என்று உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.


Next Story