வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா


வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
x

வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.

திருச்சி

மணப்பாறை:

பால்குட விழா

மணப்பாறையில் உள்ள பிரசித்திபெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் 30-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதில் தினமும் சிறப்பு வழிபாடுகள், இரவில் அம்மன் திருவீதி உலா, மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நேற்று அதிகாலை தொடங்கி மதியம் வரை நடைபெற்றது.

இதில் காலை 6 மணிக்கு கோவில் முன்பு கொடியேற்றுதல் நடைபெற்றதை தொடர்ந்து வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி தலைமையில் ஆர்.வீராசாமி நாட்டாண்மை குடும்பத்தினர் பால்குடமேந்தி மேளதாளங்கள் முழங்க முன்செல்ல அதைத்தொடர்ந்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வந்தனர்.

பாலாபிஷேகம்

பால்குட ஊர்வலம் ராஜவீதிகளின் வழியாக வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் மணப்பாறை, மருங்காபுரி தாலுகா மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களும் அம்மனுக்கு காப்பு கட்டி பால்குடம் எடுத்து வந்தனர். கரும்பு தொட்டில் போன்றவை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை ஆசிரியர் விடவை வெ.நல்லுசாமி தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் நீர்மோர், பானகம், தர்பூசணி போன்றவையும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு வெப்பம் தெரியாமல் இருக்க ஆங்காங்கே மக்கள் தண்ணீர் லாரிகளை நிறுத்தியும், தங்கள் வீடுகளில் இருந்தும் குடம் குடமாக தண்ணீரை எடுத்து வந்து பக்தர்களின் மீதும், சாலையிலும் ஊற்றினர். இதையடுத்து இரவில் முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

வேடபரி நிகழ்ச்சி

இதைத்தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் சுற்றுப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பொங்கல் வைத்து, மாவிளக்கு வைத்து, அதன் பின்பு அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மணப்பாறை போலீசார் சார்பில் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் வேடபரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருவிழாவை சிறப்பாக நடத்துவற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வைரவன், பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி ஆகியோர் தலைமையில் செய்து வருகின்றனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில், மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நவாஸ்தீன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story