போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி சிறந்த கோடை வாசஸ்தலமாக விளங்குகிறது. கோடை சீசனை முன்னிட்டு கடந்த 7-ந் தேதி கோடை விழா தொடங்கி ஊட்டியில் மலர் கண்காட்சி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதனை கண்டு ரசிக்கவும், சீசனை அனுபவிக்கவும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வருகின்றனர்.
இதனால் கடந்த சில நாட்களாக ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோடை சீசனில் ஊட்டியில் போக்குவரத்து பாதிப்பு வழக்கமான ஒன்றாகி விட்டது. ஊட்டி கமர்சியல் சாலை, மணிக்கூண்டு, லோயர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை காலையில் நிறுத்துபவர்கள் இரவு வரை எடுக்காமல் அப்படியே விடுகின்றனர். இதேபோல் கடைகளுக்குச் செல்பவர்கள் முக்கிய சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
அபராதம் விதிப்பு
மேலும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் ஊட்டியில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களை கண்டறிந்து ஆன்லைன் மூலம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பதிவெண்ணுடன் புகைப்படம் எடுக்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுற்றுலா தலமான ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்பவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கும் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.