மாவட்டத்தில் 279 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்
மாவட்டத்தில் 279 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கியது.
தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 58 மேல்நிலைப்பள்ளிகள், 56 உயர்நிலைப்பள்ளிகள், 165 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 279 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு முதற்கட்டமாக கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு ரூ.3,34,800 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும். திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
வானவில் மன்றம் செயல்பாடுகள் கேள்வி கேட்பது மற்றும் ஆராய்வதன் மூலம் மாணவர்கள் திறம்பட கற்கவும் வகுப்பறையில் அறிவியல் மற்றும் கணித கற்றலை மிகவும் எளிமையாகவும், திறமையாகவும் நிகழ்வுகளை அமைக்கவும் ஆசிரியர்கள் வழிமுறைகளை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும், என்றார். பின்னர் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.