மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வலியபடுக்கை பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று வலியபடுக்கை பூஜை நடந்தது.
இதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, அன்னதானம் நடந்தது. மாலையில் பஜனை, சாயரட்சை தீபாராதனை, நாதஸ்வரம், அத்தாழபூஜை ஆகியவை நடைபெற்றது.
இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் அம்மனுக்கு திருக்கண் சாத்தி வழிபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.
இந்த பூஜை மாசி திருவிழாவின் ஆறாம் நாள் விழாவின் போதும், மீனபரணி கொடை விழாவன்றும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திரளான பக்தர்கள்
வலியபடுக்கை மகா பூஜையின் போது அம்மனை மலர்களால் அலங்கரித்து இருந்தனர். அம்மனுக்கு அவல், பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்களும் படைக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். வலியபடுக்கை பூஜையை காண கேரளாவில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.