வேங்கிடகுளத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு
ஆலங்குடி அருகே வேங்கிடகுளத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
வடமாடு ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வேங்கிடகுளம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில், மே தினத்தை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு உறுதிமொழியை தாசில்தார் விஸ்வநாதன் வாசிக்க வீரர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.
ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 13 காளைகள் கலந்து கொண்டன. ஒரு குழுவிற்கு 9 வீரர்கள் என 13 குழுவில் 117 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளிக்குதித்து ஒடியது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
பரிசு
ஒரு காளைக்கு 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் சில குழுவை சேர்ந்த காளையர்கள் காளையை பிடிக்கவில்லை என்பதால் சில காளைகளே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. வடமாடு ஜல்லிக்கட்டை ஆலங்குடி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.