பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சர் உத்தரவு
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர்கள், வனத்துறை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இந்த அரசின் இரு முக்கிய கொள்கை. மீண்டும் மஞ்சப்பை, எனது மனதிற்கு நெருக்கமான திட்டம். இது தமிழ்நாட்டின் பண்பாட்டில் வேரூன்றியிருப்பதால் அதை மக்கள் திட்டமாக மாற்ற வேண்டியது உங்கள் கடமை. பிளாஸ்டிக் மாசை தடுத்து, மக்களின் மனநிலையை இயற்கை பொருட்களின் மீது மாற்ற வேண்டும்.
இதனால் தமிழகம் பசுமையான, இயற்கை சார்ந்த எதிர்காலத்தை நோக்கி வளர முடியும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கான விழிப்புணர்வை கலெக்டர்கள் மற்றும் மாவட்ட உயர் அலுவலர்கள் உறுதி செய்வதோடு, அவர்களின் செயல்பாடுகளில் பள்ளிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைக்க வேண்டும். பிளாஸ்டிக் அல்லாத பொருட்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழகம் முதலிடம்
அனைத்து கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வன அலுவலர்கள், கடல் அரிப்பைத் தடுக்கவும், கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிசெய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்ற முயற்சிகளில் மக்களை ஈடுபடுத்தினால் நாம் எதிர்பார்க்கும் நல்ல பலன் கிடைக்கும்.
வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மனித வனவிலங்கு முரண்பாடுகள் உடனடியாக கையாளப்படுவதையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டுத்தொகை காலதாமதமின்றி வழங்கப்படுவதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
காலநிலை மாற்ற யுக்திகள், உள்ளூர் மட்டத்தில் செயல்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். சதுப்புநில தோட்டங்கள், கடல் புற்கள் மற்றும் பவளப் பாறைகளை வளமையோடு மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நமது மாநிலம் 14 ராம்சார் ஈரநிலங்கள் கொண்டு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகும்.
சங்க கால மரங்கள்
பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் சங்க கால மரங்களான 18 மர வகைகளைச் சேர்ந்த 14 லட்சத்துக்கும் அதிகமான மரங்களைப் பொதுமக்களின் பங்கேற்புடன் அரசு நட்டுள்ளது. நடப்பட்ட மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர நீங்கள் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சங்க கால மரங்களை மீண்டும் நட்டு, நமது மண்ணின் வளத்தை மீட்டெடுப்பதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைகளை வழங்குகிறது.
வன உரிமைச்சட்டம், தகுதியுடைய பழங்குடியினருக்கும், தகுதியுடைய மலைவாழ் மக்களுக்கும், தனியாருக்குமான அனுபவ உரிமைச்சான்று வழங்கவும், பொதுப்பயனுக்கான அனுபவ உரிமைச்சான்று வழங்கவும் வழிவகை செய்கிறது. இதுவரை 11 ஆயிரத்து 245 தனியர் அனுபவ உரிமைச்சான்றுகளும், 650 பொதுப் பயனுக்கான அனுபவ உரிமைச் சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சட்டத்தின் கீழ் இன்னும் பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாவட்ட கலெக்டர்களும், வன அலுவலர்களும் இணைந்து செயல்பட்டு, விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இம்மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.