சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வு; 6 ஆயிரத்து 428 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வினை 6 ஆயிரத்து 428 பேர் எழுதினர்.
எழுத்து தேர்வு
தமிழகத்தில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வு மூலம் நேற்று நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்த 5 ஆயிரத்து 466 ஆண்கள், 2 ஆயிரத்து 168 பெண்களுக்கு என மொத்தம் 7 ஆயிரத்து 634 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தன. அதன்படி தேர்வை எழுதுவதற்காக 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் நேற்று காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்வுக்காக பெண்களுக்கு தனி மையம் அமைக்கப்பட்டிருந்தது.
6,428 பேர் எழுதினர்
தேர்வு மையத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்களிடம் இதனை நுழைவுவாயிலிலேயே போலீசார் வாங்கி வைத்துக்கொண்டு டோக்கன் வினியோகம் செய்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்ததும் அவை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வினை ஆண்கள் 4 ஆயிரத்து 586 பேரும், பெண்கள் 1,842 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 428 பேர் எழுதினர். 1,206 பேர் தேர்வு எழுதவரவில்லை.
புதுக்கோட்டையில் மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றதை சென்னை காவலர் பயிற்சி பள்ளி டி.ஐ.ஜி. ஆனிவிஜயா பார்வையிட்டார். இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆய்வு மேற்கொண்டார்.
டி.ஐ.ஜி. ஆனி விஜயா நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் காவலர் பயிற்சி பள்ளி 8 இடங்களில் உள்ளது. இவை மேம்படுத்தப்பட உள்ளது. தற்போது 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்து வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அடுத்து புதிதாக பயிற்சிக்கு வருபவர்களுக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் வெளிப்படை தன்மையாக நடைபெறுகிறது. அனைத்துவிதமான நடவடிக்கைகளும் ஆன்லைனில் மேற்கொள்ளப்படுகிறது.
தேர்வுகளில் முறைகேடுக்கு எதுவும் வாய்ப்பில்லை. மதிப்பெண்கள், தரவரிசையின் அடிப்படையில் தான் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். தமிழக காவல்துறையில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.