உமரிக்காடு கோவில் கொடை விழா:முத்தாரம்மன் சப்பர பவனி


உமரிக்காடு கோவில் கொடை விழா:முத்தாரம்மன் சப்பர பவனி
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உமரிக்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் முத்தாரம்மன் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

ஏரல்:

உமரிக்காடு முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவில் நேற்று முன்தினம் இரவு சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முத்தாரம்மன் கோவில்

ஏரல் அருகே உள்ள உமரிக்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டு வந்தது. இரவில் வில்லிசை, பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பட்டிமன்றம், மாக்காப்பு, நாதஸ்வரம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கோவில் கொடைவிழா

விழாவின் சிகர நிகழ்ச்சியான கோவில் கொடைவிழா நேற்று முன்தினம் நடந்தது. அன்று அதிகாலையில் அம்மனுக்கு அபிஷேகத்துக்காக தாமிரபரணி கடல் சங்கு முகம் சென்று மேளதாளங்களுடன் குதிரைகள் முன் செல்ல புண்ணிய தீர்த்தம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மதியம் அம்மனுக்கு தீப ஆராதனை, மாலையில் அம்மனுக்கு அபிஷேகத்துக்கு பொருநை நதியிலிருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வந்தனர். இரவு அம்பாள் தீபாராதனை, கிளாரினெட் இசை, வில்லிசை, நாதஸ்வரம், கரகாட்டம், அம்பாள் அலங்கார தீபாராதனை, ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு பொங்கலிடுதல், நள்ளிரவு பார் விளையாட்டு நடந்தது. அதனைத் தொடர்ந்து மாவிளக்கு, கயிறு சுற்றி ஆடுதல், ஆயிரம் கண்பானை, முளைப்பாரி எடுத்தல் போன்ற நேர்த்திகடன்களை பக்தர்கள் செலுத்தினர்.

சப்பர பவனி

நேற்று அதிகாலையில் யானை மற்றும் குதிரைகள் முன்செல்ல அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பவனி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாண வேடிக்கை நடைபெற்றது.

இந்த கொடை விழாவில் சென்னை, மும்பை, திருப்பூர், கோவை போன்ற நகரங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கொடை விழாவில் காலை, மதியம், இரவு அன்னதானம் நடந்தது. திருவிழாவையொட்டி மின்விளக்குகள், அலங்காரத் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.நேற்று காலை மஞ்சள் பால் பொங்கலிடுதல், காலை 10 மணிக்கு ஊர் மக்கள் முத்தாரம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். இரவு 9 மணிக்கு மாபெரும் இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொடை விழா ஏற்பாடுகளை உமரிக்காடு கிராம விவசாய சங்க தலைவர் கார்த்தீசன் நாடார் தலைமையில் நிர்வாகிகள் சாந்தசுரேஷ் நாடார், மணிகண்டன் நாடார், பிரபாகர் நாடார், கோட்டாளம் நாடார், கணக்கர் ரமணிதரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story