கனிமவள கடத்தலை தடுக்க ஆய்வுக்கூட்டம்
உடுமலை தாலுகா அலுவலகத்தில் கனிமவள கடத்தலை தடுக்க ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கனிம வளங்கள் கடத்தல்
உடுமலை, மடத்துக்குளம், பழனி தாலுகாவில் இருந்து நாள்தோறும் கேரளாவுக்கு கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது.
அதை உறுதி செய்யும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு சென்ற 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதைத்தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிம வளங்கள் ஏற்றியதாக 9 லாரிகளுக்கு ரூ.5லட்சத்து 29 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வுக்கூட்டம்
இந்த சூழலில் திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சச்சின் ஆனந்த் தலைமையில் உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பர்மிட் சீட்டில் குறைவாக அனுமதி பெற்று அதிக அளவில் கனிம வளங்களை எடுத்துச் செல்வதாகவும் கல்குவாரிகள் விதிமுறைகளில் பின்பற்றி தான் இயங்குகிறதா என்று ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் சட்டவிராத கனிமவள கடத்தலில் ஈடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.