ஓடை, கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 33 இடங்களில் ஓடைகள், கால்வாய்கள் தூர்வாரும் பணியை மேயர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 33 இடங்களில் ஓடைகள், கால்வாய்கள் தூர்வாரும் பணியை மேயர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேயர் ஆய்வு
சேலம் மாநகரில் பெய்த தொடர் மழையினால் ஒரு சில பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதை தடுக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஓடைகள் மற்றும் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி 33 இடங்களில் ஓடைகள், மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது. அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட டி.வி.எஸ் ஓடை, சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட சாமிநாதபுரம் ஓடை, அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட மிலிட்டரி ரோடு ஓடை, கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட குறிஞ்சி நகர் ராஜவாய்க்கால் ஓடைகளில் தூர்வாரும் பணியை கொட்டும் மழையில் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூர்வாரப்படும்
இந்த ஆய்வு குறித்து மேயர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள ஓடைகள், மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படும். ஓடைகளில் தூர்வாரி சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவு மண் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.
இதேபோல் அந்தோணியார்புரம் ஓடை, சீலாவரி ரோடு கால்வாய், ராமநாதபுரம் ஓடை, அல்லிக்குட்டை ஓடை, சுண்ணாம்புக்கார ஓடை, மன்னார்பாளையம் ஓடை, வெள்ளக்குட்டை ஓடை, ஏ.டி.சி. நகர் ஓடை உள்பட 33 இடங்களில் நடைபெற்று வரும் ஓடைகள், மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணியில் 35 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மண்டலக்குழு தலைவர்கள் கலையமுதன், உமாராணி, மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந், கல்விக்குழு தலைவர் முருகன், உதவி ஆணையாளர்கள் தியாகராஜன், கதிரேசன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ், சுமதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தோப்புக்காடு
இதேபோல் சேலம் தோப்புக்காடு, சின்னபுதூர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ள சேதங்களை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது வெள்ளநீர் சூழ்ந்த வீடுகளில் தண்ணீரை அப்புறப்படுத்திட தேவையான உத்தரவுகளை அதிகாரிகளுக்கு அவர்கள் பிறப்பித்தனர்.